#Rajasthan - ரந்தம்பூர் தேசிய பூங்காவில் ஒரே ஆண்டில் 25 புலிகள் மாயம்!
ரந்தம்பூர் தேசிய பூங்காவில் இருந்த 75 புலிகளில், 25 புலிகள் காணாமல் போயுள்ளதாக, தலைமை வனவிலங்கு காப்பாளர் பவன் குமார் உபாத்யாய் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூரில் அமைந்துள்ள, ரந்தம்பூர் தேசிய சரணாலயத்தில் இருந்து கடந்த சில ஆண்டுகளாகவே புலிகள் மாயமாகி வருகின்றன. இந்நிலையில் கடந்தாண்டில் மட்டும் 25 புலிகள் காணாமல் போய் உள்ளதாக தலைமை வனவிலங்கு காப்பாளர் பவன் குமார் உபாத்யாய் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்த 3 பேர்கொண்ட விசாரணைக் குழு ஒன்றையும் அமைத்துள்ளார்.
இந்த குழு இரண்டு மாதங்களில் தனது அறிக்கையை சமர்பிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். விசாரணையில் புலிகள் காணாமல் போனதற்கு பூங்கா நிர்வாகத்தின் அலட்சியம்தான் காரணம் என கண்டறியப்பட்டால், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த மே 17 முதல் செப். 30 வரை நான்கு மாத கால இடைவெளியில் காணாமல் போன 14 புலிகளை கண்டறிவதே பூங்கா நிர்வாகத்தின் முதன்மை நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.
சரணாலயத்தில் இருந்த 75 புலிகளில் மூன்றில் ஒரு பங்கு காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு புலிகள் காணாமல்போனதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது இதுவே முதல்முறை. கடந்த 2022ஆம் ஆண்டு இதே பூங்காவில் 13 புலிகள் காணாமல் போனதாக கூறப்பட்டது. ஆனால் அது 2019 முதல் 2022 வரை என மூன்று ஆண்டுகளுக்கு இடையேயான காலக்கட்டத்தில் காணமல் போனவை.
ஆனால் தற்போது ஒரே வருடத்தில் 25 புலிகள் காணாமல் போய் உள்ளன என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.