“2026 தான் இலக்கு” - தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேட்டி!
தவெகவிற்கு 2026 தான் இலக்கு எனவும், ஜூன் 18-ம் தேதி சென்னையில் தவெகவின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுவதாக வெளியான செய்தி உண்மையல்ல எனவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
புதுக்கோட்டையில் தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. தமிழகத்திலேயே முதல்முறையாக புதுக்கோட்டை தான் மாவட்ட அலுவலகம் திறக்கப்படுகிறது. இந்த அலுவலகத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திறந்து வைத்தார். பின்னர் தொண்டர்களிடம் பேசிய அவர்,
“விஜய்யின் கட்டளையை நிறைவேற்ற தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும். முதலில் தொழில் நடத்தி சம்பாதிக்க வேண்டும். அதன் பின்னர் குடும்பத்தை கவனிக்க வேண்டும். அதற்கு அடுத்தபடியாக சம்பாதித்த காசில் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதுதான் விஜய்யின் கட்டளை. அதை ஒவ்வொரு தொண்டனும் நிறைவேற்ற வேண்டும்.
விஜய் கூறியவாறு 2026 தான் நமது இலக்கு. 2026 இல் கண்டிப்பாக தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறும். அதற்கு ஒவ்வொருவரும் அயராது உழைக்க வேண்டும். நாம் யாரையும் விமர்சனம் செய்து பேச வேண்டாம். நம்முடைய மக்கள் பணியை தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம். பொதுமக்கள் பிரச்னையில் முன்னுரிமை கொடுத்து அவற்றை தீர்ப்பதற்கு தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்” இவ்வாறூ பேசினார்.
“நாம் தமிழர் கட்சியோடு கூட்டணி சேருவது குறித்து தலைவர் விஜய் தான் அறிவிப்பார். தமிழக சட்டமன்ற தேர்தல் நடப்பதற்கு இன்னமும் இரண்டு ஆண்டு காலம் உள்ளது. அவசரப்பட வேண்டாம். தமிழக வெற்றிக் கழகம் மக்களோடு இணைந்து மக்கள் பணியாற்றி வருகிறது. அடுத்ததாக நாமக்கல்லில் மாவட்ட அலுவலகம் திறக்கப்பட உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த கூட்டம் வரும் 18-ம் தேதி கூட்டம் என்று கூறவில்லை. இது எப்படி வெளியானது என்று தெரியவில்லை. 2026-ம் ஆண்டு தான் எங்களுடைய இலக்கு என்று ஏற்கனவே தலைவர் விஜய் அறிவித்து விட்டார்”
இவ்வாறு தெரிவித்தார்.