மகா கும்பமேளா 2025 - அசைவம் சாப்பிடாத காவலர்களை தேடி வரும் காவல்துறை!
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மகா கும்பமேளாவில் பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த அசைவம் சாப்பிடாத காவலர்களை மேளா காவல்துறை தேடி வருகிறது.
2025ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா விழா நடைபெறவுள்ளது. இந்துக்களின் பாரம்பரிய புனித நீராடும் நிகழ்வாக கொண்டாடப்படும் இந்த விழா ஹரித்துவார், அலகாபாத், நாசிக், கும்பகோணம் உள்ளிட்ட பல இடங்களில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். இந்த விழாவில் இந்தியாவிலிருந்தும், உலக நாடுகளின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
இந்நிலையில் மகா கும்பமேளாவில் பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த அசைவம் சாப்பிடாத காவலர்களை காவல்துறை தேடி வருகிறது. குறிப்பாக, அசைவம் சாப்பிடாத, நன்னடைத்தை உடைய, இளமையான, திறமையான, துடிப்புடன் இருக்கும், மென்மையாக பேசும் காவலர்களை மகா கும்பமேளா பணியில் அமர்த்தும் வேலை மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஜனவரி மாதத்தில் தொடங்கும் இந்த மகா கும்பமேளாவில் காவல் பணியாற்ற, கடந்த 2019ஆம் ஆண்டு மகா கும்பமேளாவில் பணியாற்றிய காவலர்களாக இருந்தால் அவர்களுக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுவெளியில் மக்களை கையாள்வது, மக்களிடம் தரக்குறைவாக நடந்துகொண்டதாக புகார்கள் இல்லாமல் இருப்பது உள்ளிட்டவை, காவலர்களுக்கான நன்னடைத்தையாகப் பார்க்கப்படுகிறது. மகா கும்பமேளா நடைபெறவிருப்பதை முன்னிட்டு, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவுப்படி, நகரை அழகாக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிகழ்ச்சிக்காக ரூ.6,800 கோடியை உ.பி. அரசு ஒதுக்கியிருக்கிறது.