2024 பாரீஸ் ஒலிம்பிக் | வெற்றியாளர்கள் ஈபிள் கோபுரத்தின் ஒரு பகுதியை வீட்டிற்கு எடுத்துச் செல்லாம்...!
இந்த முறை 2024 பாரீஸ் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில், உலகம் முழுவதிலுமிருந்து வரும் விளையாட்டு வீரர்கள் ஈபிள் கோபுரத்தின் ஒரு பகுதியை வீட்டிற்கு எடுத்துச் செல்ல உள்ளனர்.
பாரீஸ் 2024 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் எதிர் வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. ஆகஸ்ட் 28 முதல் செப்டெம்பர் 8 வரை மாற்றுத் திறனாளிகளுக்கான பராலிம்பிக் போட்டிகள் நடைபெறும்.
இவ்விரு விளையாட்டு விழாக்களிலும் மொத்தமாக 5,084 தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன. இப்பதக்கங்களின் மத்தியில் 6 கோண வடிவிலான இரும்புத் துண்டொன்றும் பதிக்கப்பட்டுள்ளது.
ஈபிள் கோபுரத்திலிருந்து அகற்றப்பட்ட அசல் இரும்புத் துண்டுகள் மூலம் ஒலிம்பிக் பதக்கத்தின் அறுகோண வடிவிலான பாகம் தயாரிக்கப்பட்டுள்ளது என பாரீஸ் ஒலிம்பிக் கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.
'பாரீஸ் ஒலிம்பிக், பராலிம்பிக் வெற்றியாளர்களுக்கு 1899 ஆம் ஆண்டின் ஈபிள் கோபுரத்தின் துண்டொன்றையும் வழங்க நாம் விரும்பினோம்' என பாரீஸ் 2024 ஒலிம்பிக், பராலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் டோனி எஸ்டாங்குவே கூறினார்.
பாரீஸை தளமாகக் கொண்ட ஆபரண வடிவமைப்பு நிறுவமான சவ்மெட் இப் பதக்கங்களை வடிவமைத்துள்ளது. நாணயங்களைத் தயாரிக்கும் அரசு நிறுவனமான 'மின்னே டி பாரீஸ்' இப்பதக்கங்களைத் தயாரித்துள்ளது.