#MadhyaPradesh-யில் புலிகள் தாக்கி இருவர் உயிரிழப்பு!
மத்தியபிரதேசத்தில் புலி தாக்கியதில் ஒரே நாளில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் உமாரியா மாவட்டத்தில் உள்ள குலுஹாபா கிராமத்தை சேர்ந்தவர் கைருஹா பைகா (வயது 45). இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது உறவினரின் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் அவர் உறவினரின் வீட்டிற்கு செல்லவில்லை, அதனுடன் தனது வீட்டிற்கும் திரும்பி வரவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் பைகாவை தேடினர்.
இந்த சூழலில், குலுஹாபா கிராமத்தில் உள்ள ஹோட்டல் அருகே மனித உடல் பாகங்கள் மற்றும் மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டது. இதனை சோதனை செய்து பார்த்ததில் அவை மாயமான பைகாவின் உடல் பாகங்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், பைகாவை புலி தாக்கி கொன்றதும் தெரியவந்தது. அப்பகுதியில் புலி நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.
இதேபோல் அம்மாநிலத்தின் பாலகாட் மாவட்டத்தில் உள்ள அம்பேஜாரி கிராமத்தை சேர்ந்த சுக்ராம் உய்கே (55) என்பவரும் புலி தாக்கியதில் உயிரிழந்தார். விவசாயியான இவர் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்ததாக தெரிகிறது.
தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் புலியை அங்கிருந்து விரட்டியடித்து சுக்ராமின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே நாளில் 2 பேர் புலியால் கொல்லப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.