லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடிபட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள்! பொறி வைத்து கைது செய்த ராஜஸ்தான் போலீசார்!
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேரை ராஜஸ்தான் மாநில லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தண்டனை தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பின், அமலாக்கத்துறைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் சிபிஐ, வருமான வரித்துறை இருந்தது போல் தற்போது அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது. தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக கூட்டணி, எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த அமலாக்கத்துறையை முழுவதுமாக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ராஜஸ்தானில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணியாற்றி வரும் அதிகாரிகள் கிஷோர் மீனா மற்றும் பாபுலால் மீனா ஆகியோர் சிட்-பண்ட் வழக்கில் ஒருவரை கைது செய்யாமல் இருப்பதற்காக ரூ.17 லட்சத்தை லஞ்சமாகக் கேட்டுள்ளனர். அவர் ரூ.15 லட்சத்தினை அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் கொடுத்தபோது ராஜஸ்தான் மாநில லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவர்களைக் கையும், களவுமாக கைது செய்தனர்.
இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் இயக்குநர் ஹேமந்த் பிரியதர்ஷி கூறியதாவது,
“புகார்தாரரின் மீது சிட்-பண்ட் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும், அவரைக் கைது செய்யாமல் இருப்பதற்கு ரூ.17 லட்சத்தினை லஞ்சமாக கொடுக்க வேண்டும் எனவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டதாக எங்களுக்கு புகார் வந்தது. அதுகுறித்து மேலும் விசாரித்தபோது புகார் உண்மையென தெரியவந்தது.
அதையடுத்து ரூ.15 லட்சத்தினை கொடுக்குமாறு கூறி, அமலாக்கத்துறை அதிகாரிகள் இருவரும் லஞ்சப் பணத்தினை பெறும்போது கையும், களவுமாக கைது செய்தோம். அவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.