2 நாள் அமெரிக்க பயணம் - டிரம்பை சந்திக்கிறார் பிரதமர் மோடி!
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து, பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். அதில் அமெரிக்க குடியேற்றக் கொள்கையும் ஒன்று. இதன்மூலம் அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி புலம்பெயர்ந்தோரைக் கண்டுபிடித்து நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். அதன்படி, முதற்கட்டமாக 104 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் கைவிலங்கு போட்டு அழைத்து வந்தது நாடு முழுவதும் எதிர்ப்பலைகளைத் தூண்டியது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்.12-ந்தேதி இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா செல்ல இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த பயணத்தின்போது, பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, "பிரதமர் மோடியின் இந்த பயணம் இந்தியா-அமெரிக்க இருதரப்பு உறவுக்கு மேலும் உத்வேகத்தையும் வழிகாட்டுதலையும் கொடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கப் பயணத்திற்கு முன்னதாக வருகிற 10-ந்தேதி பிரான்ஸ் செல்லும் பிரதமர் மோடி அங்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்திக்கிக்கவுள்ளதோடு, பாரிசில் நடைபெற உள்ள செயற்கை நுண்ணறிவு மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளார்.