திருப்பத்தூரில் ரூ.2 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம் பறிமுதல்... 7 பேர் கைது!
திருப்பத்தூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த, சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான 2 கிலோ திமிங்கல எச்சத்தை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில், திமிங்கலத்தின் எச்சம் வைத்திருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
அதில் திருப்பத்தூர் குள்ளப்பனார் தெருவைச் சேர்ந்த முத்துக்குமார் (43) என்பவர் வீட்டில், சுமார் 2 கிலோ அளவிலான திமிங்கலத்தின் எச்சம் (உமிழ்நீர்) வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் திமிங்கல எச்சத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக திருப்பத்தூர் போஸ்கோ நகரை சேர்ந்த சிவகார்த்திகேயன் (28), வினித் (27), புங்கம்பட்டு நாடுமலை கிராமத்தை சேர்ந்த அஜித்குமார் (25), திருப்பத்தூர் சவுடேகுப்பம் பழைய காலனியை சேர்ந்த பாண்டியன் (22), அன்னாண்டப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த சிக்கந்தர் (22),
சண்முகனார் தெருவை சேர்ந்த சத்யநாராயணன் (22) ஆகியோரை போலீசார் பிடித்தனர்.
இதையடுத்து அவர்கள் 7 பேரை திருப்பத்தூர் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினரின் முதல்கட்ட விசாரணையில், முத்துக்குமார் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கலத்தின் எச்சம் (உமிழ்நீர்), 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் கடத்தி வந்து வைத்திருப்பது தெரிய வந்தது. மேலும் இதுதொடர்பாக வனத்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், இதனை வெளிநாட்டில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததாகவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
மேலும் சந்தையில் இரண்டு கோடி ரூபாய் அளவிற்கு இது விற்பனை போவதாகவும், அவர்கள்
தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து 7 பேர் மீது வழக்கு பதிவு செய்த வனத்துறையினர், அவர்களை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில்
அடைத்தனர். மேலும், விலை உயர்ந்த திமிங்கல எச்சம் திருப்பத்தூருக்கு எப்படி வந்தது? இதன் பின்புலத்தில் யார் ஈடுபட்டு உள்ளார்கள் என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.