உத்தர்காசியில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் !
உத்தரகாண்ட் மாநிலம், உத்தர்காசி மாவட்டத்தில் இன்று காலை அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இதுகுறித்து மாவட்டத்தின் பேரிடர் மேலாண்மை அதிகாரி ஜெய் பிரகாஷ் சிங் பன்வார் கூறுகையில், உத்தர்காசியில் வசிப்பவர்கள் இன்று காலை இரண்டு நில அதிர்வுகளை உணர்ந்ததாக தெரிவித்தார்.
மேலும் இன்று காலை 7:41 மணிக்கு ஏற்பட்ட முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆகப் பதிவாகியுள்ளது. அதன் மையப்பகுதி மாவட்ட தலைமையகத்திற்கு அருகில் இருந்தது. பின்னர் அரை மணி நேரத்திற்குள், காலை 8:29 மணியளவில் இரண்டாவது நில நடுக்கம் உணரப்பட்டது.
இது ரிக்டர் அளவில் 3.5ஆகப் பதிவாகியுள்ளது. இந்த இரண்டாவது நிலநடுக்கம் கங்கோத்ரி பத்வாரி மண்டத்தில் உள்ள பார்சு காடுகளை மையமாகக் கொண்டிருந்தது. நிலநடுக்கத்திற்குப் பிறகு வருணவரத் மலையில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தவிர மாவட்டத்தில் உயிரிழப்புகள் அல்லது சொத்து சேதங்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து குடியிருப்பு வாசிகள் விழிப்புடன் இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையுமாறும் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.