காஷ்மீரில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் - ரிக்டரில் 4.9 ஆக பதிவு!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் 4.9 மற்றும் 4.8 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா பகுதியில், இன்று (ஆக. 20) காலை 6.45 மணிக்கு அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இது ரிக்டர் அளவுகோலில் 4.9 மற்றும் 4.8 ரிக்டர் என்ற அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. பாரமுல்லாவில் பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 4.8 ரிக்டர் அளவில் பதிவான 2வது நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் மற்றும் உயிரிழப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. பாரமுல்லா மாவட்ட நிர்வாக அதிகாரிகள் நிலவரம் குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், மேலும் ஏதேனும் நில அதிர்வுகள் ஏற்பட்டால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.