கே-பாப் பாடல்களை கண்டு ரசித்ததாக 2 சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் தண்டனை - வட கொரியாவில் அதிர்ச்சி!
தென் கொரியாவின் கே-பாப் பாடல்களை கண்டு ரசித்த குற்றத்துக்காக 2 சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் கடுமையான வேலை செய்யும் தண்டனையை வட கொரிய அரசு விதித்திருப்பது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் கொரிய பாப் இசை, சினிமாவைக் கண்டு ரசித்ததற்காக 16 வயதே நிரம்பிய இரண்டு சிறுவர்கள் தண்டிக்கப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் ஓர் திறந்தவெளி அரங்கில் பழுப்பு நிற உடையணிந்த 2 சிறுவர்கள் கைகள் கட்டப்பட்டு அழைத்து வரப்படுகிறார்கள். அந்த அரங்கில் 1000 சிறுவர்கள் அமர்ந்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்திருக்கின்றனர். இதுவே அந்த வீடியோ கொரோனா காலத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்பதை உணர்த்துகிறது. அப்போது ஒருவர் அவர்களுக்கான தண்டனையை அறிவிக்கிறார்.
அவர்கள் இருவரும் வெளிநாட்டுக் கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டதால் வாழ்க்கையை அழித்துக் கொண்டார்கள் என கூறி தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த 2 சிறுவர்களும் 12 ஆண்டுகள் கடுமையான வேலை செய்யும்படி வட கொரிய அரசு தண்டனை விதித்துள்ளது. இந்த நிகழ்வு சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு சிறுவர்களின் குடும்பங்களும் பியோங்யாங்கில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வட கொரியா பல ஆண்டுகளாகவே தென் கொரியாவுடன் எந்த விதத்தில் தொடர்பு ஏற்படுத்தினாலும் சொந்த மக்களை தண்டிக்கும் போக்கைக் கொண்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு இதற்காக பிரத்யேக சட்டத்தைக் கொண்டுவந்தது. தென் கொரிய பொழுதுபோக்கு அம்சங்களை ரசிப்பதை தடை செய்யும் சட்டம் அமலாக்கப்பட்டது. அந்தச் சட்டத்தின்படியே அந்த இரண்டு சிறுவர்களுக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கடந்த 2001-ம் ஆண்டு வட கொரியாவில் இருந்து வெளியேறி ஜப்பானில் தஞ்சமடைந்து அங்குள்ள டோக்கியோ பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் பேராசிரியராக இருக்கும் முனைவர் சோய் க்யோங் ஹுய் கூறுகையில்,
“இதுபோன்ற கடுமையான தண்டனையை அளித்ததன் மூலம் ஒட்டுமொத்த வட கொரிய மக்களுக்கும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் கொரிய கலாச்சாரம் வட கொரியாவில் ஊடுருவி வருவதை இது உறுதிப்படுத்துகிறது. இந்த வீடியோ 2022-ல் எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதுகிறேன். ஜென் எக்ஸ் தலைமுறையினர் அவர்கள் சிந்திக்கும் போக்கை மாற்றியுள்ளனர். அது கிம் ஜோங் உன் கட்டமைத்துள்ள வட கொரிய சிந்தனையை எதிர்ப்பதாக உள்ளது. இது கிம்மை கவலையில் ஆழ்த்தியுள்ளது. அதனாலேயே அவர் இத்தகைய தண்டனைகளை அமல்படுத்துகிறார்” என்று தெரிவித்துள்ளார்.