திருத்தணி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி!
கன்னிகாபுரம் ஊராட்சியில் உள்ள கல்குவாரி குட்டையில் தவறி விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் கன்னிகாபுரம் ஊராட்சியில், தமிழ்நாடு அரசால்
கைவிடப்பட்ட கல்குவாரி குட்டை ஒன்று உள்ளது. இதே கன்னிகாபுரம் பகுதியில் கூலித் தொழிலாளர்களான ஆறுமுகம் மற்றும் முருகேசன் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சகோதரர்கள். இவர்களின் மகன்களான பிரவீன்(10) மற்றும் கிரிநாத் (10) அருகிலுள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுவர்கள் இருவரும், அங்கிருந்த குட்டையில் கால் கழுவ இறங்கியுள்ளனர். அப்போது தவறி குளத்தின் உள்ளே விழுந்து, இருவரும் தண்ணீரில் மூழ்கினர். தகவல் அறிந்த சிறுவர்களின் பெற்றோர் அவர்களை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருத்தணி டிஎஸ்பி கந்தன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு குழந்தைகள் குளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.