தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 2023-ம் ஆண்டில் 19 லட்சம் பேர் பயன்!
2023-ம் ஆண்டில் 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் 19,19,504 பேரும், அதில் பிரசவ சேவைகளில் 5,07,071 பேரும், சாலை விபத்துகளில் சிக்கிய 3,34,527 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இஎம்ஆர்ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மொத்தம் 1353 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. சுமார் 6 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவசர மருத்துவ உதவிக்காக, தினமும் கட்டுப்பாட்டு அறைக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸ் சேவையின் செயல்பாடுகள் குறித்து அதன் மாநிலத் தலைவர் செல்வகுமார், மண்டலத்தலைவர் முகமது பிலால் ஆகியோர் கூறியதாவது:
“108 சேவையைப் பொருத்தவரை சென்னை உட்பட பல மாவட்டங்களில் அழைப்பு வந்த 7 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் உதவி கிடைக்கும் வகையிலான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதற்காக விபத்து நேரிட வாய்ப்புள்ளபகுதிகள், முக்கிய இடங்கள், சந்திப்புகள் உள்ளிட்ட இடங்களில் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 91,084 பேர் பயனடைந்துள்ளனர். அவர்களில் 19,829 கர்ப்பிணிகளும், சாலை விபத்துக்குள்ளான 15,866 பேரும் பயன்பெற்றுள்ளனர். அவசர காலங்களில் தாமதமின்றி ஆம்புலன்ஸ் சேவை கிடைப்படை தொடர்ந்து உறுதி செய்து வருகின்றோம்” என அவர்கள் தெரிவித்தனர்.