மோசடிகளுக்கு பயன்படுத்தப்பட்ட 18 லட்சம் சிம் கார்டுகள் முடக்கம்!
சைபர் கிரைம் மற்றும் ஆன்லைன் மோசடிகளைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் மொத்தம் 18 லட்சம் சிம் கார்டுகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பண மோசடி, சைபர் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகள் மற்றும் செல்போன் எண்கள் குறித்து மக்களிடமிருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பயன்பாட்டில் இருந்த 18 லட்சம் சிம் கார்டுகள் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டில் சைபர் மோசடி மூலமாக மக்கள் இழந்த ஒட்டுமொத்த தொகை ரூ.10,319 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 6,94,000 புகார்கள் வந்துள்ளன.
மோசடியாளர்கள் பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சிம் கார்டுகளை பயன்படுத்தி மோசடிகளை செய்துவிட்டு, பின்னர் சிம் கார்டு மற்றும் மொபைலை மாற்றுகின்றனர். இதனால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போய்விடுகிறது.
புகார்களின் அடிப்படையில் தொலைத் தொடர்புத் துறை, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மே 9ஆம் தேதி 28,220 செல்போன்களை முடக்கவும், 20 லட்சம் செல்போன் எண்களை பயன்படுத்துவோரின் தகவல்களை மறு ஆய்வு செய்யவும் அறிவுறுத்தியிருக்கிறது. அதில், 10 சதவீத செல்போன் எண்கள் மட்டுமே ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. மற்ற அனைத்து எண்களும் ஆய்வுக்குட்படுத்த பயனர்கள் முன்வராததால் ரத்து செய்யப்பட்டுள்ளன.