₹2000க்கு குறைவான பரிவர்த்தனைகளுக்கான 18% GST வரி முடிவு - மத்திய அரசு தற்காலிகமாக ஒத்திவைப்பு!
ரூ. 2,000 வரையில் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிப்பது குறித்த முடிவு ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் 54-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று (செப். 9) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காப்பீட்டு தவணைக் கட்டணத்துக்கு (ப்ரீமியம்) விதிக்கப்படும் ஜிஎஸ்டி, ஜிஎஸ்டி விகித சீரமைப்பு தொடர்பான அமைச்சர்கள் குழுவின் (ஜிஓஎம்) பரிந்துரைகள், இணைய விளையாட்டுகள் தொடர்பான ஜிஎஸ்டி நிலவர அறிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சிலில், மாநில அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் ஆயுள் காப்பீடு தவணைக் கட்டணத்துக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்களித்தல், மருத்துவக் காப்பீடு தவணைக் கட்டணம் மீதான ஜிஎஸ்டியை குறைத்தல் அல்லது அந்த ஜிஎஸ்டியை செலுத்துவதில் இருந்து மூத்த குடிமக்கள் போன்றவர்களுக்கு விலக்களித்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், ரூ. 2,000 வரையில் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிப்பது குறித்து மத்திய அரசு கருத்து கேட்டது. இந்த நடைமுறை அமலப்டுத்தப்பட்டால் சிறிய அளவிலான பரிவர்த்தனை செய்யும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று உறுப்பினர்கள் கூறியதால், இறுதி முடிவு எடுக்காமல் பகுப்பாய்வு மற்றும் பரிந்துரைகளுக்காக நிர்ணயக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.
இந்த குழுவானது, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு வரி விதித்தால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்து ஜிஎஸ்டி குழுவுக்கு அறிக்கையை சமர்பிக்கும். எனவே மத்திய அரசு இந்த முடிவை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.