பட்டாசு இல்லாமல் தீபாவளி கொண்டாட்டம்!... | பறவைகளுக்காக ஒரு கிராமமே 17 ஆண்டுகளாக செய்துவரும் மகத்தான தியாகம்!...
ஈரோடு மாவட்டத்தில் பறவைகளுக்காகப் பட்டாசு வெடிக்காமல் கிராம மக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினர்.
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே அமைந்துள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலயம் 240 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த பறவைகள் சரணாலயத்திற்கு கீழ்பவானி பாசன வாய்க்கால் கசிவுநீர் ஆதாரமாக விளங்குகின்றது.
இந்த சரணாலயத்திற்கு ஆண்டின் நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில், இந்திய
நாட்டின் பறவைகளான மஞ்சள் மூக்கு நாரை, கரண்டி வாயன், கூழைக்கடா, நத்தைக்
குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் போன்ற பறவைகளும் , வெளிநாடுகளிலிருந்தும்
109 வகையான பறவைகளும் வந்து செல்கின்றன.
குறிப்பாக, ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரியா நாடுகளில் இருந்து பெலிகன் பறவைகள்
பெருமளவில் இங்கு வருகின்றன. இங்கு வரும் பறவைகள் நான்கு மாத காலம் வரை தங்கியிருப்பதுடன் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்து சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த பறவை இனங்களைக் கண்டு ரசிக்க ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், கரூர்
உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
பறவைகளின் வருகை காலத்தில் தீபாவளி பண்டிகை வருவதால் இந்த சரணாலயத்தைச்
சுற்றியுள்ள கவுண்டச்சிபாளையம், புங்கம்பாடி, மேட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பறவைகளுக்காக,
பட்டாசு வெடிக்காமல், தீபாவளி கொண்டாடுகின்றனர்.
தீபாவளி மட்டுமல்ல, திருவிழா காலங்களிலும், பட்டாசு வெடிக்க மறுக்கின்றனர்.
காரணம் பட்டாசு சத்தம், பறவைகளுக்கு இடையூறாகவும், அச்சத்தையும் ஏற்படுத்தும்
என்பதால், சிறுவர்கள்கூட பட்டாசு வெடிப்பதில்லை. உலகம் தற்போது எதிர்கொண்டு வரும் சுற்றுச்சூழல் மாசு வெப்ப மயமாதல் பிரச்சனையைத் தவிர்க்கும் வகையில் இந்த கிராம மக்கள் புகை மற்றும் ஒலியில்லாத தீபாவளி கொண்டாடுவது அனைவரும் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.