Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்துறை வேலைகளில் 15% தமிழ்நாட்டை சேர்ந்தது” - அமைச்சர் #TRBRajaa பெருமிதம்!

09:15 PM Sep 30, 2024 IST | Web Editor
Advertisement

மத்திய அரசு வெளியிட்டுள்ள 2022-23ம் ஆண்டுக்கான தொழில்துறையின் வருடாந்திர கணக்கெடுப்பின்படி, நாட்டில் உருவாக்கப்பட்ட அனைத்து தொழில்துறை வேலைகளில் 15% தமிழ்நாட்டைச் சேர்ந்தது என தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

Advertisement

தொழிற்சாலைகளின் உற்பத்தி திறன், மதிப்பு கூட்டுதல், வேலைவாய்ப்பு, மூலதன உருவாக்கம் போன்றவற்றின் அடிப்படையில், அவற்றின் அமைப்பு மற்றும் வளர்ச்சியில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்த விரிவான தகவல்களை தெரிவிக்கும் நோக்குடன், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஆண்டுதோறும் தொழிற்சாலைகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2022-23-ம் நிதியாண்டுக்கான மதிப்பீட்டு அறிக்கையை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையின்படி,

“2022-23-ம் ஆண்டின் விலை நிலவரம் அடிப்படையில், மொத்த மதிப்பு கூட்டுதல் அதற்கு முந்தைய ஆண்டை விட 7.3% அதிகரித்துள்ளது. இந்தக்கால கட்டத்தில் இடுபொருட்களின் அளவு 24.4% அதிகரித்துள்ள வேளையில், உற்பத்தி பொருளின் அளவு 21.5% அதிகரித்துள்ளது. அடிப்படை உலோகம், நிலக்கரி, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள், உணவுப் பொருட்கள், ரசாயனப் பொருட்கள், மோட்டார் வாகனத் தொழில்துறையின் செயல்பாடுகள் தான் இத்தகைய வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளன.

மதிப்பு கூட்டுதலில் மகாராஷ்டிரா முதலிடம் வகிக்கிறது. 2வது இடத்தில் குஜராத், 3வது இடத்தில் தமிழ்நாடும் உள்ளன. அடுத்த 2 இடங்களில் கர்நாடகா, உத்தரப்பிரதேசம் இடம் பெற்றுள்ளன. இந்த 5 மாநிலங்களும் நாட்டின் மொத்த மதிப்பு கூட்டுதல் அடிப்படையிலான மொத்த உற்பத்தியில் 54%- க்கும் அதிகமான பங்களிப்பை வழங்கி வருகிறது.

அதிக நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிய முன்னணி மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அடுத்த 4 இடங்களில் மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப்பிரதேசம் மற்றும் கர்நாடகா உள்ளன. இந்த 5 மாநிலங்கள் மட்டும் உற்பத்தி துறை சார்ந்த வேலைவாய்ப்பில் சுமார் 55% பங்களிப்பை வழங்கியுள்ளது” இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போதும் கூறுவது போல், நாம் ஈர்த்து வரும் முதலீடுகளின் ஒவ்வொரு ரூபாயும் நமது இளைஞர்களுக்கு தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. மத்திய அரசு வெளியிட்டுள்ள 2022-23ம் ஆண்டுக்கான தொழில்துறையின் வருடாந்திர கணக்கெடுப்பின்படி, நாட்டில் உருவாக்கப்பட்ட அனைத்து தொழில்துறை வேலைகளில் 15% தமிழ்நாட்டைச் சேர்ந்தது.

இது தொழிற்துறையில் நாட்டிலேயே நம்மை தலைசிறந்த மாநிலமாக மாற்றியுள்ளது. வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியில் இடைவிடாத கவனம் செலுத்தி வருகிறோம் என்பதற்கு இது ஒரு சான்று!” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Tags :
DMKEmploymentJobsJobs For TNMK StalinNews7TamilTamilNaduTN GovtTRB Rajaa
Advertisement
Next Article