2022-ல் 14 லட்சம் பேருக்கு புற்றுநோய் பாதிப்பு: 9 லட்சம் பேர் உயிரிழப்பு!
2022ஆம் ஆண்டில் இந்தியாவில் 14.1 லட்சம் பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதாகவும், 9.1 லட்சம் பேர் புற்றுநோயால் இறந்ததாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் கீழ் செயல்படும் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கடந்த 2022ம் ஆண்டில் இந்தியாவில் புதிதாக 14.1 லட்சம் பேருக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டது. புற்றுநோய் பாதிப்பால் 9.1 லட்சம் பேர் இறந்துள்ளனர். புற்று நோய்களில் மார்பக புற்றுநோய் பொதுவானதாக உள்ளது. உதடு, வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்களால் அதிகமான ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மார்பக மற்றும் கருப்பை வாய் புற்றுநோய்கள் பெண்களுக்கு மிகவும் பொதுவானவை. இந்தியாவில், 75 வயதை அடைவதற்கு முன் புற்றுநோயால் பாதிக்கப்படும் வாய்ப்பு 10.6 சதவீதம் என கணக்கிடப்படுகிறது.
கடந்த 2020 ல், உலக சுகாதார நிறுவனம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை அழிப்பதற்கான உலகளாவிய உத்தியை ஏற்றுக்கொண்டது. அதன்படி 90 சதவீதம் சிறுமிகளுக்கு மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசியை 15 வயதிற்குள் முழுமையாக செலுத்த வேண்டும். 70 சதவீதம் பெண்களை 35 வயதிற்குள்ளும் மீண்டும் 45 வயதிற்குள்ளும் பரிசோதிக்க வேண்டும் என்று கடுமையாக அறிவுறுத்தியுள்ளது. ஒவ்வொரு நாடும் 2030 ம் ஆண்டிற்குள் இந்த இலக்குகளை அடைய வேண்டும். அடுத்த நூற்றாண்டில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை முழுமையாக அகற்ற வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.