ஆசிரியருக்காக பள்ளியை மாற்றிய 133 மாணவர்கள் - தெலங்கானாவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!
தெலங்கானாவில் பிடித்தமான ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்காக பள்ளியில் உள்ள பாதி மாணவர்கள் அவர் சென்ற பள்ளிக்கே சேர்ந்த சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
மாணவர்களின் வழிகாட்டிகளாக ஆசிரியர்களே விளங்குகின்றனர். அதிலும் சில ஆசிரியர்கள், மாணவர்களின் மனதில் நீங்கா இடம்பெற்றுவிடுகின்றனர். காரணம், அவர்கள் போதிக்கும் திறமையால் மாணவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடிவிடுகிறது. குறிப்பாக அரசு பள்ளிகளில் பணிபுரியும் சில ஆசிரியர்கள், வகுப்பறையில் பாடம் கற்றுக்கொடுப்பதையும் தாண்டி, ஒவ்வொரு மாணவர்களின் உயர்வுக்கும் தனிப்பட்ட முறையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள்.
அதேநேரத்தில், மாணவர்களுக்குப் பிடித்தமான ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டால், மாணவர்கள் வருத்தமடைவதும், சில நாள்களில் அது சரியாவதும் உண்டு. இதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புகூட தமிழகத்தில் பகவான் என்ற ஆசிரியருக்கு பணியிட மாற்றம் கிடைத்தது. ஆனால், அந்த ஆசிரியரை அப்பள்ளியில் படித்த மாணவர்கள் போக விடாமல் தடுத்த காணொளி காட்சிகள் இணையத்தில் வைரலாகின.
இந்த நிலையில், தமக்குப் பிடித்த ஆசிரியர் ஒருவர் வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பள்ளிக்கே பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்றிருப்பது ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது. தெலங்கானா மாநிலம், மஞ்சேரி மாவட்டத்தில், பொனகல் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் 12 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ஸ்ரீனிவாசன் (53). இவர் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு பாடம் எடுத்துவந்தார். இவர் ஓர் ஆசிரியராக மட்டுமின்றி மாணவர்களுக்கு பாதுகாவலராகவும் விளங்கினார்.
இந்த நிலையில், கடந்த ஜூலை 1-ஆம் தேதி ஆசிரியர் ஸ்ரீனிவாசன் அக்காபெல்லிகுடா என்ற இடத்தில் உள்ள பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த பள்ளி பொனகல் கிராமத்தில் இருந்து 3 மைல் தொலைவில் உள்ளது. எனினும், ஆசிரியர் ஸ்ரீனிவாசன் இடமாறுதலாகி செல்வதை மாணவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இதனால், பல மாணவர்கள், ‘வேறு பள்ளிக்குப் போகவேண்டாம் சார்’ என்று கண்ணீர் விட்டுக் கதறி அழுதுள்ளனர்.
மாணவர்களின் பெற்றோரும் ஆசிரியரின் பணியிட மாறுதலை திரும்ப பெற அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால் அதற்கெல்லாம் பலன் இல்லை. இடமாறுதல் உத்தரவை திரும்ப பெற வாய்ப்பு இல்லை என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
”பள்ளியில் உள்ள 250 மாணவர்களில் பாதி மாணவர்கள் அதாவது, 133 மாணவர்கள் ஆசிரியர் சென்ற பள்ளிக்கே சென்று சேர்ந்திருப்பது இதுவே முதல்முறை. இதுபோன்ற சம்பவம் எங்கும் கேள்விப்பட்டதே இல்லை. இது வியப்பை ஏற்படுத்தி உள்ளது” என மாவட்ட கல்வி அதிகாரி யாதைய்யா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆசியர் ஸ்ரீனிவாசன், ”பெற்றோர்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இது காட்டுகிறது. ஒவ்வொரு மாணவர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு என் திறமைக்கு ஏற்ப, அவர்களுக்குக் கற்பித்தேனே தவிர வேறேதும் நான் செய்யவில்லை. அதை மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர். என்னை அதிகம் நேசிக்கத் தொடங்கினர். மேலும், அரசுப் பள்ளிகளிலும் தற்போது தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பெற்றோர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” அவர் கேட்டுக்கொண்டார்.