பீகாரில் மின்னல் தாக்கி 13 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!
பீகாரில் மின்னல் தாக்கி 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பீகாரில் நேற்று பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதில் ஆங்காங்கே மின்னல் தாக்கியது. இந்த நிலையில் மின்னல் தாக்கி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது குறித்து பீகார் முதலமைச்சர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,
"பெகுசராய் மாவட்டத்தில் ஐந்து பேரும், தர்பங்காவில் நான்கு பேரும், மதுபனியில் மூன்று பேரும், சமஸ்திபூரில் ஒருவரும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகளுக்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இரங்கல் தெரிவித்து, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும் பேரிடர் மேலாண்மைத் துறையின் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு முதலமைச்சர் நிதிஷ்குமார் மாநில மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த ஆண்டு பிப்ரவரியில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சமீபத்திய பீகார் பொருளாதார கணக்கெடுப்பு (2024-25) அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் மின்னல் அல்லது இடியுடன் கூடிய மழையால் 275 பேர் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டது. இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை மற்றும் புயல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மாநிலத்தின் பல பகுதிகளுக்கு வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சவுர் பஜார், முர்லிகஞ்ச், மாதேபுரா, சதார்கட்டியா, கைலாத், சிங்கேஷ்வர், பன்மன்கி, குமார்கண்ட், பர்காமா, சங்கர்பூர், கம்ஹாரியா, சுபால், திரிவேணிகஞ்ச், பிப்ரா, மரவுனா, கிஷன்பூர், கோகார்திஹா, பிரதாப்கஞ்ச், சத்தபூர், ரகோபூர், சராய்கர் பாப்தியாஹி, நிர்மாலி, புல்பராஸ், லௌகாஹி மற்றும் பசந்த்பூர் ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டவைக்குள் அடங்கும். இந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.