உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மலைகளின் அரசி என அழைக்கப்படும் ஊட்டியில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மே மாதங்களில் கோடை சீசன் களை கட்டுவது வழக்கம். இந்த மாதங்களில் தான் ஊட்டிக்கு அதிக அளவிலான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். கோடை விடுமுறையை கொண்டாட ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை கவர இங்கு ஆண்டு தோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உதகை தாவரவியல் பூங்காவில் 127வது மலர் கண்காட்சி இன்று (மே 15) தொடங்கியுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்டி வரும் 25ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த ஆண்டு நடக்கும் மலர் கண்காட்சியில் சிறப்பு அம்சமாக, ஜெர்மனியம், சைக்ளோபின், பால்சம், புதிய ரக ஆர்னமெண்டல்கேல், ஓரியண்டல் லில்லி, பேன்சி மேரிகோல்டு, ஜினியா, டெல்முனியம் உள்பட 275 வகையான விதைகள், நாற்றுகள் பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டு, மலர் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டது. தொடர்ந்து பூங்காவில் பல்வேறு பகுதிகளில் 7½ லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன. இதேபோல் மலர் மாடம் உள்ளிட்ட இடங்களில் 45 ஆயிரம் மலர் தொட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.
பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் விதமாக ராஜராஜ சோழனின் அரண்மனை போன்று, 2 லட்சம் கார்னேசன் உள்பட பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. சோழ அரசின் பெருமைகளை விளக்கும் விதமாக 65 ஆயிரம் பூக்களால் கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணை வடிவம் போன்று அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று 7 லட்சம் மலர்களால் செஸ், யானை என பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று கண்ணாடி மாளிகை, கள்ளிச்செடி மாளிகை புதுப்பிக்கப்பட்டு, அங்கும் அரியவகை தாவரங்கள் மற்றும் மலர் செடிகள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது.