வாடிக்கையாளர் “பசி” என்றதால் அதிகாலை 3 மணிக்கு 12 கி.மீ. பயணித்து டெலிவரி செய்த ஸ்விக்கி ஊழியர்!
ஹைதராபாத்தில் உணவை ஆர்டர் செய்யும் போது தவறான Location-ஐ வாடிக்கையாளர் பதிவு செய்துள்ளார். ஆனால் “பசியோடு இருக்கிறேன்” என வாடிக்கையாளர் கூறியதால், அதிகாலை 3 மணிக்கு கூடுதலாக 12 கி.மீ தூரம் பயணித்து உணவை டெலிவரி செய்த ஸ்விக்கி ஊழியர் முகமது ஆசமை நெட்டிசன்கள் வாழ்த்தி வருகின்றனர்.
திடீரென ஒரு புதிய பயணம் எப்போதும் ஒரு பயம் கலந்த அனுபவத்தை தான் கொடுக்கும். ஆனால் அதில் வெகு சிலருக்கு மட்டுமே மனம் நெகிழும் அனுபவம் கிடைக்கும். அந்த நொடி மனிதநேயத்தின் மீதான நம்பிக்கை அதிகரிக்க காரணமாக கூட அமையும். அப்படியாக கிடைக்கும் அனுபவத்தால் வெகுசிலர் தங்களது சுய பண்புகளை மாற்றிக் கொள்வதும் உண்டு.
அந்த வகையில் தமால் ஷா என்ற நபர் தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்-க்கு சென்ற போது தனக்கு நடந்த மனம் நெகிழும் அனுபவத்தை ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் அந்த பதிவில்,
”நீண்ட நேர பணிக்கு பிறகு மிகவும் தாமதமாக விடுதிக்கு வந்தேன். அருகில் இருந்த அனைத்து உணவகங்களும் மூடப்பட்டிருந்ததால் வேறு வழி இல்லாமல் உணவை ஸ்விக்கியில் ஆர்டர் செய்தேன். எனக்கு ஹைதராபாத் பற்றி அதிகம் தெரியாது. ஊருக்கு புதியவன் என்பதால் ஸ்விக்கி மேப்பில் நான் தங்கியிருக்கும் இடத்தை பதிவிடுவதற்கு பதிலான, தவறான முகவரியை பதிவு செய்துவிட்டேன்.
பொதுவாக இது போன்ற நேரத்தில் பெரும்பாலானோர் ஆர்டரை கேன்சல் செய்ய சொல்லி விடுவார்கள். ஆனால் எனது ஸ்விக்கி டெவிவரி ஊழியர் அப்படி செய்யவில்லை. சரியான இடத்தை குறிக்காதது என்னுடைய தவறாக இருப்பினும், ஸ்விக்கி டெலிவரி ஏஜென்ட் இரவில் சுமார் 12 கிமீ தூரம் வாகனத்தை ஓட்டி வந்து என்னுடைய இடத்தை கண்டுபிடித்து உணவை டெலிவரி செய்தார். நான் உணவை வாங்கிய போது அதிகாலை 3 மணி.
இதற்கு மத்தியில் தவறான இடத்தை குறித்ததை அறிந்து ஸ்விக்கி ஊழியரிடம் போனில் பேசிய போது, ‘அண்ணா நான் காலையில் இருந்து எதுவும் சாப்பிடவில்லை’ என கூறினேன், உடனே என்னுடைய இடத்திற்கே வருவதாக கூறினார். 3 மணிக்கு உணவை டெலிவரி செய்துவிட்டு ‘ஒருவரை பசியுடன் வைத்திருப்பது மனிதாபிமானம் இல்லை. அதனால் தான் வந்தேன்’ என்று கூறினார். அந்த டெலிவரி ஊழியர் பெயர் முகமது ஆசம்.
நல்ல மனிதர்கள் நம்மை சுற்றி இருக்கிறார்கள். மனிதநேயத்தின் மீதான எனது நம்பிக்கையை அவர் மீண்டும் நிலைநாட்டினார். அவர் புகைப்படம் எடுக்க கூச்சப்பட்டார். அவர் என் இதயத்தை வென்றார். இது எனது தெலங்கானா பயணத்தின் சிறந்த நினைவாக இருக்கும். டெலிவரி செய்துவிட்டு போகும் போது ஆசம் சிரித்துக்கொண்டே 'குட்நைட்’ என்றார்.
உடனே நான் எப்போது உங்க வேலையை முடிப்பீர்கள் என கேட்டேன். இப்போ வீட்டுக்கு போறேன் சாப்பிட்டுவிட்டு தூங்கி விடுவேன் என்றார். நான் உணவைப் பகிர்ந்து கொள்ள அழைத்தேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். நீங்கள் கடவுளை வணங்கும்போது என்னை நினைத்துக்கொள்ளுங்கள் போதும் என்றார்.” இவ்வாறு தமால் ஷா தனது பதிவை முடித்திருந்தார்.
டெலிவரி ஊழியர்களை பற்றி அவ்வப்போது பல வித குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில், இதுபோன்ற ஊழியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.