Marriage, Divorce.. Repeat.. '43 ஆண்டுகால திருமண வாழ்வில் 12 முறை விவாகரத்து பெற்றுக் கொண்ட வினோத தம்பதி!
ஆஸ்திரேலியாவில் வயதான தம்பதியினர் கடந்த 43 ஆண்டுகளில் 12 முறை விவாகரத்து செய்து மறுமணம் செய்து கொண்ட சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தற்போதைய காலகட்டங்களில் பெருநகரங்களில் விவாகரத்து, மறுமணம் போன்றவை மக்களிடையே சாதாரணமாகிவிட்டது. அதன்படி விவாகரத்துகளும், மறுமணமும் கிராமங்களை விட நகரத்தில் இயல்பாக நடக்கின்றன. நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தில் இடம்பெற்ற வந்தான் சுட்டான் செத்தான் ரிபீட்.. என்கிற வசனம் போல ஆஸ்திரியாவில் திருமணம், விவாகரத்து, ரிப்பீட்டு என்பதுபோல ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆஸ்திரேலியாவில் ஒரு ஜோடி மீண்டும் மீண்டும் விவாகரத்து மற்றும் மறுமணம் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் வியன்னாவில் வயதான தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்தநிலையில் இவர்கள் இருவரும் தங்கள் திருமணத்திற்கு பின்னர், கிட்டத்தட்ட 12 முறை திருமணம் செய்து விவாகரத்து கோரியுள்ளனர். அதுவும் அவர்களது 43 வருட திருமண வாழ்க்கையில் ஒவ்வொரு முறையும் விவாகரத்து செய்து மீண்டும் மறுமணம் செய்துள்ளனர். அப்படி 12 முறை விவாகரத்து செய்த வயதான தம்பதியினர் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை விவாகரத்து செய்து, பின்னர் மறுமணம் செய்து கொண்டு 40 வருடங்களாக ஒரே வீட்டில் வாழந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், அக்கம் பக்கத்தினர் வயதான தம்பதியினர் வசிக்கும் வீட்டில் இருந்து சண்டை சச்சரவுகள் போன்ற எந்த விதமான சத்தமும் எங்களுக்கு கேட்கவில்லை என்று கூறியுள்ளனர். அவர்கள் இருவரும் காதல் ஜோடி என்றும் இவர்கள் ஏன் விவாகரத்து மற்றும் மறுமணம் செய்துகொள்கிறார்கள் என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தியபோது, உண்மையில் அந்த விவாகரத்து மற்றும் மறுமணம் நிதி மோசடிக்காக நடந்தது என்று தெரியவந்துள்ளது.
அதாவது, விதவைகளை ஆதரிப்பதற்காக ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் வழங்கப்படும் நிதித் திட்டத்தில் உள்ள சலுகையை இந்த தம்பதியினர் பயன்படுத்திக் கொண்டனர். கணவனை இழந்து தனியாக வாழும் பெண்களுக்கு உதவித் தொகையாக 28,300 டாலர்கள் (சுமார் 24 லட்சம் ரூபாய்) ஆஸ்திரேலிய அரசாங்கம் வழங்கி வருகிறது. ஒரு பெண் தனது கணவனை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்யும்போது, இந்த பணம் அரசாங்கத்தால் நிதி உதவியாக வழங்கப்படுகிறது. இந்த பணத்தைப் பெற ஒவ்வொரு முறையும் இருவரும் விவாகரத்து செய்து, பின்னர் மறுமணம் செய்து கொண்டனர்.
இருப்பினும், மே மாதம் 2022 இல் அந்தப் பெண் தனது 12வது விவாகரத்துக்குப் பிறகு அரசாங்க நிதி உதவிக்காக பென்ஷன் இன்சூரன்ஸ் நிறுவனத்தை அணுகியபோது இந்த விஷயம் தெரியவந்துள்ளது. அப்போது, இருவரின் திருமணமும், விவாகரத்தும், அரசின் நிதியுதவி பெறுவதற்காக திட்டமிட்டு செய்த மோசடி என்று விசாரணையில் தெரியவந்தது. இந்த மோசடியில் ஈடுபட்டு 11 முறை அரசிடம் இருந்து நிதியுதவி பெற்றுள்ளதும் ,12வது முறை விவாகரத்து, அரசால் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
மேலும், இந்த ஜோடி தற்போது நிதி மோசடி வழக்கு தொடர்பான விசாரணையை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசை ஏமாற்றி, சொத்து சேர்த்ததாக அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதேபோல் அவர்களின் வழக்குடன் வேறு யாரேனும் இது போல் மோசடி செய்து அரசை ஏமாற்றி உள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் விவாகரத்து செய்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.