உறுப்பு மாற்று சிகிச்சையில் சாதனை படைத்த தமிழ்நாடு - கடந்த 15 ஆண்டுகளில் 11,002 சிகிச்சைகள்!
தமிழ்நாட்டில் கடந்த 15 ஆண்டுகளில் 11,002 உறுப்பு மாற்று சிகிச்சைகள்
நடைபெற்றுள்ளதாக மாநில உறுப்பு மாற்று ஆணையம் தெரிவித்துள்ளது.
விபத்து, புற்றுநோய், பிறவி குறைபாடு மற்றும் தீக்காயம் உள்ளிட்டவையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அறுவை சிகிச்சையின் மூலம் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்படுகிறது. சாலை விபத்துகளில் பெரிய அளவிலான ஆபத்துக்களும், சில சமையங்களில் மூளைச்சாவு ஏற்படுகின்றது. விபத்துகளில் மூளைச்சாவு ஏற்பட்டவர்களின் உடல் உறுப்புகள் தானமாக கொடுக்கப்படுகிறது.
இதையும் படியுங்கள் : பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி - இன்று முதல் துவக்கம்!
இந்நிலையில், மாநில உறுப்பு மாற்று ஆணையம் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை குறித்து ஆய்வு நடத்தியுள்ளது. ஆய்வின் முடிவில், கடந்த ஆண்டில் மட்டும் 935 உறுப்பு மாற்று சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் அதிகபட்சமாக சிறுநீரகமும், அதற்கு அதற்கு அடுத்தபடியாக விழி வெண்படலம், கல்லீரல் ஆகியவை உறுப்பு மாற்று சிகிச்சைக்காக தானமாகப் பெறப்பட்டுள்ளன.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
"உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் என்ற முன்னோடி அமைப்பு நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் முதன்முதலில் தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. அதன் காரணமாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நாட்டின் தலைநகராகவே தமிழ்நாடு விளங்கி வருகிறது.
மூளைச் சாவு அடைந்த ஒருவரால் 7 பேருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும். அதன் அடிப்படையில், ஒருவரிடம் இருந்து பெறப்படும் உடல் உறுப்புகள், உரிய விதிகளின் படியே பயனாளிகளுக்கு பொருத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் இதுவரை 1,817 கொடையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட 11,002 உறுப்புகள் தகுதியானவர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளன.
அவற்றில் 3,285 சிறுநீரகங்களும், 2,000 அதிகமான விழி வெண்படலங்களும், 1,686 கல்லீரல்களும், 1,025 இதய வால்வுகளும், 838 இதயங்களும், 961 நுரையீரல்களும் தானமாகப் பெறப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன. இதன் வாயிலாக பல்லாயிரக்கணக்கானோர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்"
இவ்வாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.