தஞ்சையில் 1038-வது சதய விழா; ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
1038-வது சதய விழாவை முன்னிட்டு ராஜராஜ சோழன் சிலைக்கு மக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்தாண்டு ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா நேற்று, (24ம் தேதி), காலை மங்கல இசையுடன் துவங்கியது. தொடர்ந்து திருமுறை பாடல்கள், கருத்தரங்கம், 1038 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றன.
தொடர்ந்து சதய விழாவான இன்று (25ம் தேதி) ராஜராஜ சோழன் மீட்டெடுத்த பன்னிரு திருமுறை சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டு, ஓதுவார்கள் பன்னிரு திருமுறை பாடல்களை பாடி ஊர்வலமாக, யானை மீது எடுத்துச் சென்றனர்.
இதற்கிடையில் பெரிய கோவில் வெளியே உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் மாலை அணிவித்தார். இதில் பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ராஜராஜ சோழன் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.