ரிசர்வ் வங்கியிடம் பேடிஎம் சிக்கியது எப்படி? வெளியான அதிர்ச்சித் தகவல்!
டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்ய பயன்படும் பேடிஎம் பேமெண்ட் பேங்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்கி ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மார்ச் மாதமே புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதித்து அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தணிக்கையாளர்கள் குழுவை ரிசர்வ் வங்கி நியமித்திருந்தது.
அதன் தொடர்ச்சியாக, தற்போது விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி அந் நிறுவனத்தையே ஒட்டுமொத்தமாக முடக்கியுள்ளது ரிசர்வ் வங்கி. இதனால், அதன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வங்கிசார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
டிஜிட்டல்யுகத்தில் பெருநகரங்கள் தொடங்கி சிறு கிராமங்கள் வரை டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை பெருகி விட்டது. இந்நிலையில், பேடிஎம் , கூகுள் பே, போன் பே உள்ளிட்ட பல யுபிஐ செயலிகள் மக்கள் மத்தியில் பணப் பரிவர்த்தனை செய்வதில் அதிகம் புழக்கத்தில் உள்ள செயலிகளாகும்.
இதன் மூலம் பணம் அனுப்புதல், பெறுதல், ரீசார்ஜ் செய்தல், கடன் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் முக்கிய பங்கு வகிக்கும் பேடிஎம் பேமெண்ட் பேங்க்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்தியா முழுவதும் 30 கோடி வடிக்கையாளர்களை கொண்டிருப்பதாக கூறி வருகிறது.
இந்த பேடிஎம் செயலி மூலம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை, கடன் வழங்குதல் உள்ளிட்ட பணப் பரிவர்த்தனை சார்ந்த சேவைகளை செய்து வருகிறது பேடிஎம் பேமென்ட் லிமிடெட். இந்நிலையில் 2022 மார்ச் மாதம் 11ஆம் தேதி மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், பிரிவு 35A வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம் 1949இன் கீழ் இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்குவதாக தெரிவித்தது.
விதிகளுக்கு உட்படாதது, நிதிநிலை அறிக்கையில் பிரச்னை உள்ளிட்ட காரணங்களுக்காக உடனடியாக அதன் செயல்பாடுகளை முடக்குவதாகவும், இதற்கு மேல் புதிய வாடிக்கையாளர்களை இணைக்க கூடாது என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்தது. அந்நிறுவனத்தின் கணக்கு மற்றும் செயல்பாடுகளை ஆய்வு செய்து விரிவான தணிக்கை அறிக்கையை சமர்ப்பிக்க தணிக்கையாளர் குழுவையும் நியமித்தது.
இதையும் படியுங்கள்: ஜார்க்கண்ட் சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் அரசு வெற்றி!
தொடர்ந்து அந்நிறுவனம் விதிமீறல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறி பிப்ரவரி 29, 2024 க்கு மேல் இந்நிறுவனத்தின் எந்த வித செயல்பாடுகளும் நடைபெறாது என முழுமையாக பேடிஎம் பேமெண்ட் பேங்க்ஸ் லிமிட்டட் நிறுவனத்தை முடக்கி உத்தரவு ஒன்றை ஜன.31-ம் தேதி அறிக்கை வெளியிட்டது ரிசர்வ் வங்கி.
இந்த நிலையில் சரியான அடையாளம் இல்லாமல் பேடிஎம் (Paytm) பேமெண்ட்ஸ் வங்கியில் உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கணக்குகள் தான் இந்திய ரிசர்வ் வங்கி அந்த நிறுவனம் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க முக்கிய காரணமாக இருந்துள்ளது.
வாடிக்கையாளர்களின் தகவல்களைப் போதிய அளவு பெறாமல் பல கணக்குகள் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இது பணமோசடி நடப்பதற்கான வாய்ப்புக்கு வழிவகுத்துள்ளது.