திருவள்ளூர் - பெரியபாளையம் பகுதியில் டாஸ்மாக் கடைகளில் கொள்ளை! 6 பேரை சுற்றிவளைத்து பிடித்த போலீஸ்!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மதுபான கடைகளின் சுவற்றில் துளையிட்டு மதுபான பாட்டில்களை கொள்ளையடித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் வெங்கல் அடுத்த மெய்யூர் தாமரைப்பாக்கம் பகுதியில் கடந்த மாதம் 30-ஆம் தேதி டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளையிட்டு கொள்ளையடிக்கப்பட்டது. இதில் சுமார் 7 லட்சம் மதிப்பிலான மதுபானங்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றனர். இது குறித்து வெங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இதே போல் கடந்த 11-ஆம் தேதி பெரியபாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட மெய்யூரிள் உள்ள டாஸ்மாக் கடையின் சுவற்றிலும் துளையிட்டு 5 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இந்த இரு நிகழ்வுகள் குறித்தும் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாந்தி தலைமையில் காவல் துறையினர் 2 தனிப்படைகள் அமைத்து அடையாளம் தெரியாத நபர்களை வலை வீசி தேடிவந்தனர். இந்நிலையில் வெங்கல் அருகே வாகன சோதனையின் போது சந்தேகத்திற்கு இடமாக வந்த டெம்போ வேனை மடக்கி பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அதில் டாஸ்மாக் மதுபானங்கள் இருந்தது. இதில் சம்பந்தப்பட்டவர்களை விசாரணை மேற்கொண்ட போது 2 டாஸ்மாக் மதுபான கடைகளில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர்.
குற்றவாளிகள் பிரபாகரன்(24) சரத்குமார்(28), இன்னாச்சி முத்து(32), ஸ்டீபன்(34), இசக்பி முத்து(30), தர்மேந்தர்(26) ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து 3,100 மதுபான பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய டெம்போ வேனையும் பறிமுதல் செய்தனர்.