மகளிர் உலகக் கோப்பை : இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை!
இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30-ம் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று முடிவில் இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் 5 முதல் 8 இடங்களை பெற்று வெளியேறின. மேலும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் தோல்வி பெற்று வெளியேறியது.
இதனை தொடர்ந்து இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த நிலையில் மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இன்று இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் 3 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் (7 புள்ளி) 4-வது இடம் பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. அரையிறுதியில் 7 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை தோற்கடித்து 3-வது முறையாக இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தென்ஆப்பிரிக்க அணி லீக் சுற்றில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் (10 புள்ளி) 3-வது இடம் பிடித்து அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. அரையிறுதியில் 4 முறை சாம்பியனான இங்கிலாந்தை விரட்டியடித்து முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டியது.
இந்த நிலையில் போட்டி நடைபெற உள்ள நவிமும்பையில் இன்று மழை பெய்வதற்கு 63 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மழையால் ஆட்டம் பாதியில் நின்றால் நாளை மறுநாள் போட்டி நடைபெறும். இந்த போட்டியில் கோப்பையை கைப்பற்றும் அணிக்கு ரூ.39½ கோடி பரிசாக வழங்கப்படு உள்ள நிலையில் 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.19¾ கோடி வழங்கப்படும்.