For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இந்த வாரம் ரிலீஸான படங்களில் எது டாப் ? Week endல் எந்த படம் பார்க்கலாம்?

தமிழில் இந்த வாரம் வெளியான திரைப்படங்களின் மினி விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
03:20 PM Dec 06, 2025 IST | Web Editor
தமிழில் இந்த வாரம் வெளியான திரைப்படங்களின் மினி விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த வாரம் ரிலீஸான படங்களில் எது டாப்   week endல் எந்த படம் பார்க்கலாம்
Advertisement

தமிழில் இந்த வாரம் முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் வெளியாகவில்லை. கார்த்தியின் "வா வாத்தியார்" மற்றும் பாலகிருஷ்ணாவின் "அகண்டா 2" ஆகிய படங்களின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கம்மாள், சாவீ, சாரா, நிர்வாகம் பொறுப்பல்ல ஆகிய படங்கள் இந்த வாரம் திரைக்கு வந்துள்ளன. இந்த படங்களின் மினி ரிவியூ இதோ...!

Advertisement

அங்கம்மாள்

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கோடித்துணி என்ற சிறுகதையைதான் அங்கம்மாள் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குனர் விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். கீதா கைலாசம் அங்கம்மாளாக நடித்துஇருக்கிறார். நெல்லை மாவட்ட கிராமத்தில் வசித்து வரும் அவருக்கு 2 மகன்கள். முதல் மகன் பரணி, 2வது மகன் சரண்சக்தி. டாக்டருக்கு படித்தவர் சரண், தனது காதலி வீட்டுகாரர்களை தனது திருமணம் பற்றி பேச வீட்டுக்கு அழைக்க நினைக்கிறார். அப்போது அந்த கால பெண்கள் மாதிரி ஜாக்கெட் அணியாமல் சேலை அணியும் பழக்கம் உள்ள தனது அம்மா மாற வேண்டும். ஜாக்கெட் அணிய வேண்டும் என நினைக்கிறார். ஆனால், அங்கம்மாளுக்கு அதில் விருப்பம் இல்லை. தனது உரிமை, சுதந்திரத்தில் யாரும் தலையிடக்கூடாது என நினைக்கிறார் என்ன நடக்கிறது என்பது கதை.

அங்கம்மாள் என்ற கிராமத்து பெண்ணாக கீதா கைலாசம் வாழ்ந்து இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். சுருட்டு பிடிக்கும் பழக்கம் உடையவராக, டிவிஎஸ் சேம்பில் சென்று பால் விற்பனை செய்பவராக, அவ்வப்போது கெட்டவார்த்தை பேசிக்கொண்டு, நக்கல் பேசிக்கொண்டு, பிடிவாதகாரியாக மிக சிறப்பாக நடித்து இருக்கிறார். அவரின் கம்பீரமான, அசல்டான நடிப்பு, குடும்ப பிரச்னைகளை கையாரும் விதம் பல விருதுகளை பெற்று தரும். அவர் மூத்த மகனாக வரும் பரணியின் கோபம், நாதஸ்வரம் வாசிக்கும் அழகு, இளைய மகன் சரணின் பாசம், காதல் காட்சிகள் கியூட். அங்கம்மாள் மருமகளாக வரும் தென்றல் அப்பாவிதனத்தில் கை தட்டல் வாங்குகிறார். கிராமத்து மனிதர்கள், பேத்தியாக வரும் யாஸ்மின் ஆகியோரும் சிறப்பான பங்களிப்பை தந்து இருக்கிறார்கள். கிராமத்து பெரிய மனிதர், அங்கம்மாள் முன்னாள் காதலர் வரும் சீன்கள் அவ்வளவு அருமை. அங்கம்மாள், அவர் மருமகள், பேத்தி, வருங்கால மருமகள் என 4 பெண்களின் சமூக பார்வை, அவர்களின் எண்ணங்கள், நடிப்பு படத்துக்கு பெரிய பிளஸ். நெல்லை மாவட்ட கிராமத்து அழகை அள்ளி வைத்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் அஞ்ஜாய் சாமுவேல். முகமது மக்புல் மன்சூரின் இசை, உச்சிமலை பாடல் அவ்வளவு இனிமை.

ஜாக்கெட் அணிவது தனது உரிமை, சுதந்திரம் என நினைக்கும் அங்கம்மாள் மனநிலை மட்டுமல்ல, 1990களில் உள்ள கிராமத்து வாழ்க்கை, கிராமத்து மனிதர்களின் குணங்கள், அவர்கள் வாழ்க்கை என பல விஷயங்களை படம் அழுத்தமாக விவரிக்கிறது. கோபி கருணாநிதியின் ஆர்ட் வொர்க் பக்கா. அங்கம்மாளின் கோபம், பிடிவாதம், கிராமத்து பெண்களிடம் கிண்டல், உச்சிமலை காற்று பற்றி விவரிக்கும் அழகு. குடும்ப சண்டை, மகன், மருமகளின் எண்ண ஓட்டங்கள், குமுறல்கள் படத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கிறது. சினிமாதனம், ஓவர் பில்டப் இல்லாமல் ஒரு நல்ல சிறுகதையை அதன் இயல்பிலேயே சொல்லியிருப்பதும் படத்தை ரசிக்க வைக்கிறது. தமிழில் இப்படியொரு அழகான, உணர்வுபூர்வமான கிராமத்து படம், பெண்ணியம் பேசும் படம் பார்த்து எவ்வளவு நாளாச்சு என்ற உனர்வை அங்கம்மாள் தருகிறது

சாவீ

ஹீரோ உதய் தீப்பின் மாமா திடீரென விபத்தில் இறக்கிறார். வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் அவர் உடல் இரவில் திடீரென காணாமல் போக, உறவினர்கள் அதிர்ந்து போகிறார்கள். அந்த உடலை எடுத்தது யார்? என்ன காரணம்? மீண்டும் உடல் கிடைத்ததா என்பதை கொஞ்சம் டார்க் காமெடி கலந்து சொல்லும் படம் சாவீ. இப்படத்தை ஆண்டன் அஜித் இயக்கியிருக்கிறார். உடல் எங்கே? என போலீஸ் ஆதேஷ்பாலா விசாரணை செய்யும் காட்சிகள், உதய்தீப், அவர் மாமா மகள் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் படத்துக்கு பிளஸ். கிளைமாக்சில் அந்த உடல் என்ன ஆனது என்பதை, ஒறு மாறுபட்ட கோணத்தில் சொல்கிறார் இயக்குனர். அந்த சீன்களும், குடும்ப பிரச்சனைகள், விசாரணை சம்பந்தப்பட்ட சீன்களும் விறுவிறு.

ஹீரோவின் ஒரு மாமா இறந்த உடலை போலீஸ் தேடிக்கொண்டிருக்கும்போது இன்னொரு மாமாவும் திடீரென இருக்கிறார். அந்த சீன்கள் கலகலப்பு. மாமாக்களின் வாழ்க்கை என்ன நடந்தது, விதி எப்படி விளையாடியது, குடும்ப பிரச்னைகள், பிளாஷ்பேக் பற்றியும் இயக்குனர் சொல்கிறார். ஒரு மாறுபட்ட கதையை, போதை விழிப்புணர்வு படமாக சொல்லியிருப்பது புதுமை. இனி, தம் அடிக்காதீங்க, போதையை பயன்படுத்தாதீங்க. அதனால், உங்கள் வாழ்வில் பல மோசமான விஷயங்கள் நடக்கும் என்ற கரு ஓகே. ஆனாலும், இன்னும் கொஞ்சம் திரைக்கதையை, காமெடி காட்சிகளை சிறப்பாக எடுத்து இருந்தால் படம் இன்னும் பேசப்பட்டு இருக்கும்.

நிர்வாகம் பொறுப்பல்ல

மோசடி செய்து, சில ஆயிரம் கோடியை சுருட்டும் ஒரு பலே ஆசாமியின் கதை. அந்த ஆசாமியாக, கொஞ்சம் நெகட்டிவ் கலந்து ஹீரோ கதாபாத்திரத்தில் எஸ்.கார்த்தீஸ்வரனே நடித்து இருக்கிறார். அவரே படத்தை இயக்கியும் இருக்கிறார். சதுரங்க வேட்டை பாணியில் மக்களை ஏமாற்றும் கதை இது. செல்போனில் ஆசை வார்த்தை காண்பித்து, அதிக வட்டி தருவதாக சொல்லி, குறைந்த விலைக்கு செல்போன் விற்பதாக விளம்பரப்படுத்தி, காதல் என்ற பெயரில் ஏமாற்றி பல ஆயிரம் கோடிகளை அடிக்கிறார் ஹீரோ. அவரை பற்றி விசாரித்து, கடைசியில் அவரை கைதும் செய்கிறார் போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ஸ்ரீநிதி. ஆனால், ஹீரோ வழக்கம்போல் தனது புத்திசாலி தனத்தால் ஜெயிக்கிறார். அது எப்படி என்ற ரீதியில் படம் செல்கிறது.

புதுப்புது கெட்அப்பில் மக்களை ஏமாற்றுகிறார் ஹீரோ. அந்த காட்சிகள் பரவாயில்லை ரகம். சில சீன்களில் ஓவர் பில்டப், நாடகத்தனம் இருக்கிறது. ஹீரோவின் காதலியாக வரும் மிருதுளாவும் ஏமாற்றப்பட்டு, 500 கோடியை இழப்பது புது விஷயமாக இருக்கிறது. ஹீரோவை தேடி ஸ்ரீநிதி அலைவதும், அவருடன் மோதுவுதும், அவர் நடிப்பும் ஓகே. கிளைமாக்ஸ் டுவிஸ்ட் ரசிக்க வைக்கிறது. மற்றபடி, காமெடி பெரிதாக வொர்க் அவுட் ஆகவில்லை. மக்களை ஏமாற்றும் ஹீரோ டெக்னிக், அந்த டீமில் இருப்பவர்கள் நடிப்பு சினிமாதனம். சதுரங்க வேட்டை பாணி படம், ஆனா, அந்த மாதிரி இல்லை

சாரா

செல்லக்குட்டி இயக்கத்தில் அவரே கதைநாயனாக, வில்லனாக நடித்த படம் சாரா. சிவில் இன்ஜினியரான சாக்‌ஷிஅகர்வாலை, கொஞ்சம் மாறுபட்ட மனநிலையில் இருக்கும் செல்லக்குட்டி கடத்துகிறார். அவர் ஏன் கடத்தப்பட்டார், அவரை தந்தை பொன்வண்ணன், போலீஸ் அதிகாரி அஸ்மிதா மீட்டார்களா..? என்பதே கதை. விஜய் விஷ்வாவுடன் திருமணத்துக்கு தயாராகும் சாக் ஷிஅகர்வாலை, ஒரு நாள் இரவில் கடத்தி சித்ரவதை செய்கிறார் செல்லக்குட்டி, தனது அம்மா ஆசைக்காக இப்படி செய்வதாக சொல்கிறார். இப்படி செல்லக்குட்டி மாற காரணம் என்ன? என்பதை ஒரு பிளாஷ்பேக்கில் சொல்கிறார்கள்.

அம்மாவாக நடித்து இருக்கிறார் அம்பிகா. பெரும்பாலான காட்சிகள் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெரிய பில்டிங்கில் நடக்கிறது. சாக் ஷிஅகர்வால் அழகாக இருக்கிறார். சில இடங்களில் பயந்து நடித்து இருக்கிறார். ரோபோசங்கர், பழைய ஜோக் தங்கதுரை, பொன்வண்ணன் என பலர் இருந்தாலும், பெரும்பாலால சீன்களில் தன்னை முன்னிறுத்தி நடித்து தள்ளுகிறார் செல்லக்குட்டி. இடைவேளைக்குபின் அந்த நடிப்பே சில இடங்களில் இம்சை ஆக இருக்கிறது. எதுக்கு இவ்வளவு சவுண்டு, இவ்வளவு ஓவர் ரியாக் ஷன் என கேட்க தோன்றுகிறது.

சிறப்பு செய்தியாளர் : மீனாட்சிசுந்தரம் 

Tags :
Advertisement