#WeatherUpdate | வங்கக்கடலில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது,
"தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின்மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, அதே பகுதியில் நிலவுகிறது. அதன் தாக்கத்தால் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது 2 நாட்களில் மேற்கு திசையில், தமிழகம் – இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும். தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களிலும், 11, 12-ம் தேதிகளில் ஒருசில இடங்களிலும்,13, 14, 15-ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 35-45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்"
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.