"வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் உள்ள மேலமடை சந்திப்பில் ரூ.150.28 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை பொது மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். புதிய உயர்மட்ட மேம்பாலத்திற்கு "வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்" என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த பாலம் மதுரை தொண்டி சாலையில் அண்ணா பேருந்து நிலைய சந்திப்பில் தொடங்கி ஆவின் சந்திப்பு, மேலமடை சந்திப்பு வழியாக மதுரை சுற்றுச் சாலையில் இணைந்து அதன் தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் முடிவடைகிறது. இச்சாலை மதுரை மாவட்டத்தையும், சிவகங்கை மாவட்டத்தையும் இணைக்கும் முக்கிய மாநில நெடுஞ்சாலை ஆகும். இந்த சாலையில் அதிகமான கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளது.
மேலும் போக்குவரத்துச் செறிவு அதிகமாக உள்ள காரணத்தினால் இப்பகுதியில் உள்ள மூன்று சந்திப்புகளிலும் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் மதுரை தொண்டி சாலை, கோரிப்பாளையம் முதல் சுற்றுச் சாலை வரை போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும். 2023 -ஆம் ஆண்டு அக்டோபா் 30 ஆம் தேதி பாலம் அமைப்பதற்கான பணிகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில் 950 மீட்டா் தொலைவுக்கு 28 தூண்கள் கொண்ட உயர்மட்ட மேம்பாலமாக கட்டப்பட்டுள்ளது.
மதுரை அண்ணாநகா், மாட்டுத்தாவணி, கே.கே.நகா், அண்ணா பேருந்து நிலையம், கருப்பாயூரணி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பயனடைவா். அதுமட்டுமன்றி, மதுரை மாநகரிலிருந்து சிவகங்கை, திருச்சி, சென்னை, ராமநாதபுரம், தென் மாவட்டங்களான விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளுக்கும் எளிதாக சென்று வர முடியும்.