"புதுச்சேரி தேர்தல் களத்தில் தமிழக வெற்றிக் கழக கொடி பறக்கும்" - தவெக தலைவர் விஜய்!
புதுச்சேரி துறைமுக மைதானத்தில் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டம் நடைபெறும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த கூட்டத்துக்கு பாஸ் உள்ளவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக நடைபெறும் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி என்பதால், அதிகளவில் கூட்டம் கூடாத வகையில், கியூஆர் கோடுகளுடன் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டது.
இதனிடையே கியூ.ஆர். கோடு பாஸ் இல்லாதவர்களும் பொதுக்கூட்டத்தில் நுழைய முயன்றதால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், போலீசாருக்கும் தவெகவினருக்கும் இடையில் லேசான தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்த தொண்டர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் சென்ற நிலையில் பாஸ் இல்லாதவர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசியவர், "என் நெஞ்சில் குடி இருக்கும் புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் எனது வணக்கம். ஒன்றிய அரசுக்கு தான் தமிழ்நாடு தனி மாநிலம், புதுச்சேரி தனி மாநிலம். ஆனால் நாம் அனைவரும் ஒரே சொந்தம் தான். தமிழ்நாடு, ஆந்திர, கேரளா, புதுச்சேரி மட்டுமல்லாது உலகத்தில் இருக்கும் அனைவரும் நமது சொந்தம் தான்.

உலகத்தில் எந்த மூலையில் தமிழர்கள் இருந்தாலும் அவர்கள் நம் உயிர் தான். பாச உணர்வு இருந்தால் போதும் வேறு எதுவும் தேவையில்லை. மகாகவி பாரதியார் இருந்த மண், பாரதிதாசன் பிறந்தமண் போன்ற சிறப்புகளை பெற்றது புதுச்சேரி. புதுச்சேரி அரசு தமிழ்நாடு அரசு போல் இல்லை.
இந்த அரசாங்கம் வேறு ஒரு கட்சி கூட்டம் நடத்தினாலும் பல பாதுகாப்புகள் அளித்துள்ளது. இதை பார்த்தாவது தமிழ்நாடு அரசு திருந்த வேண்டும். புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு மனப்பூர்வ நன்றி. புதுச்சேரியில் கூட்டனியில் இருந்தாலும் ஒன்றிய பாஜக அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு 16 தீர்மானம் அனுப்பியும் ஒன்றிய அரசு செவி சாய்க்கவில்லை. 20 லட்சம் பேர் வாழ்ந்து வரும் புதுச்சேரியில் மத்திய நிதி குழுவில் இடம் பெறாததால் மாநிலத்திற்கு நிதி ஒதுக்கபடுவது இல்லை. நான் புதுச்சேரி மாநிலத்திற்கு எப்போதும் துணை நிற்பேன். இந்த விஜய் தமிழ்நாட்டிற்கு மட்டும்தான் குரல் கொடுப்பார் என்று நினைக்காதீர்கள். புதுச்சேரிக்கும் சேர்த்து குரல் கொடுப்பேன், இது என் கடமை.
நமக்காக வந்தவர் எம்.ஜி.ஆர். அவரை மிஸ் செய்து விடாதீர்கள் என நம்மை அலர்ட் செய்தது புதுச்சேரிதான். தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு முன்பாகவே புதுச்சேரியில் ஆட்சி அமைத்தார் எம்.ஜி.ஆர். தமிழ்நாடு போலவே புதுச்சேரி மக்களும் 30 ஆண்டுகளாக என்னை தாங்கி பிடித்துள்ளார்கள். மாநில அந்தஸ்து வாங்கினால் மட்டும் போதாது. தொழில் வளர்ச்சியும் வேண்டும். மற்ற மாநிலங்களைப் போல் புதுச்சேரியில் ரேசன் கடைகளை தொடங்கி மக்களுக்கு மானிய விலையில் பொருட்களை வழங்க வேண்டும். புதுச்சேரி தேர்தல் களத்தில் தமிழக வெற்றிக் கழக கொடி பறக்கும். நம்பிக்கையாக இருங்கள்.
வெற்றி நிச்சயம் என்று தெரிவித்துள்ளார்.