குற்றாலம் சாரல் திருவிழா இன்று கோலாகலத் தொடக்கம்!
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது இதமான சூழல் நிலவி, சாரல் மழையும் அவ்வப்போது பெய்து வருவதால், சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அவர்களை மகிழ்விப்பதன் பொருட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் புகழ்பெற்ற சாரல் திருவிழா இன்று (ஜூலை 20, 2025) கலைவாணர் அரங்கில் கோலாகலமாகத் தொடங்குகிறது. இந்த ஆண்டு சாரல் திருவிழா தொடர்ந்து 8 நாட்கள் நடைபெறவுள்ளது.
இந்த எட்டு நாட்களிலும் சுற்றுலாப் பயணிகளையும், பொதுமக்களையும் கவரும் வகையில் பல்வேறு கண்கவர் நிகழ்ச்சிகளுக்கும், போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதில் ஆணழகன் போட்டி, குற்றாலத்தின் இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளில் படகுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்க உள்ளது.
மேலும் பிஞ்சு குழந்தைகளின் கள்ளங்கபடமற்ற சிரிப்பையும், குறும்புத்தனத்தையும் ரசிக்கும் விதமாக கொழு கொழு குழந்தைகள் போட்டி நடைபெறுகிறது. வண்ணமயமான கோலங்கள் வரையப்பட்டு, பெண்களின் கலைத்திறன் வெளிப்படுத்த கோலப்போட்டி, பல்வேறு வகை நாய்கள் பங்கேற்கும் கண்காட்சி, அரிய வகை மலர்கள் மற்றும் கண்கவர் பூக்களால் ஆன அலங்காரங்கள் கொண்ட மலர் கண்காட்சி, பல்வேறு வகையான நறுமணமிக்க வாசனை திரவியங்கள், உற்சாகமான நீச்சல் போட்டிகளும், காய்கறி கண் காட்சியும் நடைபெறவுள்ளன.
இதனை தொடர்ந்து பாரம்பரிய கலைகளையும், இளம் திறமையாளர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சாரல் திருவிழா பொது மக்களுக்கு குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.