தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் : 5 கோடி படிவங்கள் விநியோகம் என தேர்தல் ஆணையம் தகவல்
பீகார் சட்டமன்றத் தேர்தலையொட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் மறைவு, இடம்பெயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது. இதற்கு எதிர்கட்சிகள் தரப்பில் கடுமையாக எதிர்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணையமானது பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறும் என்று அறிவித்தது. அதன்படி தமிழ் நாட்டில் கடந்த 4 ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பபணிகள் நடைபெற்று வருகிறது.
இதனிடையே சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்திற்கு தடை விதிக்கக்கோரி திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இரண்டு வாரத்தில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அளித்து உத்தரவு பிறப்பித்தனர். மேலும் வழக்கு விசாரணையை நவம்பர் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் 5 கோடி எஸ்.ஐ.ஆர் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 27 அக்டோபர் 2025 வரை சுமார் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர் என்றும் இதுவரை 5,00,67,045 (78.09%) சிறப்பு தீவிர திருத்த படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ் நாட்டில் 68467 வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளும், 2,11,445 வாக்குச்சாவடி நிலை முகவர்களும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.