தமிழ் நாட்டில் SIR : திமுக கூட்டணிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
பீகார் சட்டமன்றத் தேர்தலையொட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் மறைவு, இடம்பெயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது.
இதற்கு எதிர்கட்சிகள் தரப்பில் கடுமையாக எதிர்ப்பு எழுந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ”பீகாரை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற உள்ளது. அதன்படி, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், கோவா, சத்தீஸ்கர், குஜராத், கேரளம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஆகிய மாநிலங்களிலும் அந்தமான், லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன” என்று அறிவித்தார்.
தேர்தல் ஆணையமானது தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என்ற அறிவித்துள்ள நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திமுக கூட்டணி கட்சி தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இக்கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.