Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“சந்தன கடத்தல் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும்” - புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாரயணசாமி பேட்டி!

03:12 PM Jun 17, 2024 IST | Web Editor
Advertisement

புதுச்சேரி வனத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமாரின் மகளுக்கு சொந்தமான இடத்தில் சந்தனக்கட்டை பறிமுதல் செய்தது தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என அம்மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

Advertisement

இதுகுறித்து, புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவை பாஜக கூட்டணியில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணித்துள்ளார். இதிலிருந்து பாஜக - என்ஆர் காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதா? என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதை புதுச்சேரி மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்தியா கூட்டணியினர் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. நீட் தேர்வு முறைகேடுகள் பீகார் மற்றும் குஜராத் மாநிலத்தில் அதிகளவில் நடைபெற்றுள்ளது. நீட் தேர்வு தேவையில்லாத ஒன்று. ஏற்கனவே மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இருந்தது. ஆனால் தற்போது நீட் தேர்வு வசதிபடைத்தவர்களுக்கு மட்டும் பயனுள்ளதாக உள்ளது. கையூட்டு கொடுத்து மருத்துவ இடங்களை பெறுகின்றனர். நீட் தேர்வால் நாட்டில் பல உயிர்களை நாம் இழந்துள்ளோம்.

நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதை மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏற்றுக்கொண்டுள்ளார். அதனால் உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி அரசு மின்துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும்.

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பிற்கான உண்மைநிலை இதுவரை கண்டறியப்படவில்லை. விஷவாயு விவகாரத்தில் நிரந்தர தீர்வை இந்த அரசு இதுவரை எடுக்கவில்லை. புதுச்சேரியில் வனத்துறை அமைச்சருடைய மகளுக்கு சொந்தமான இடத்தில் இருந்து சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6.2 டன் சந்தன கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை தமிழக வனத்துறை பறிமுதல் செய்துள்ளனர்.

எந்தவித அனுமதியும் இல்லாமல் அந்த தொழிற்சாலை இயங்கி வந்துள்ளது. இந்த விவகாரத்தில் புதுச்சேரி அரசிடமிருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். சந்தன கட்டைகள் விவகாரத்தில் தெளிவான அறிக்கையை புதுச்சேரி அரசு மத்தியில் சமர்ப்பிக்க வேண்டும். ரெஸ்டோ பார்கள் மூலம் புதுச்சேரியில் கலாச்சார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளது. மக்கள் நிம்மதியை இழந்துள்ளனர். முதலமைச்சர் ரங்கசாமி கல்வி நிறுவனங்கள், கோயில்கள் மற்றும் மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் உள்ள ரெஸ்டோ பார்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Tags :
BJPCongressNarayanasamyNEETPuducherrySandalwood smuggling
Advertisement
Next Article