3 ஏக்கர் நெற்பயிர்களை டிராக்டர் மூலம் அழித்த பெண் விவசாயி - கண்ணீர் மல்க கோரிக்கை!
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, நேற்று (24-10-2025) காலை 05.30 மணியளவில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, நாளை மறுநாள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாகவும் வலுவடையக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு-வட கிழக்கு திசையில் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளை கடந்து நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தஞ்சை மாவட்டம் திருப்பந்துருத்தி கிராமத்தைச் சேர்ந்த விஜி என்ற பெண் விவசாயி 4 ஏக்கரில் குத்தகைக்கு எடுத்து குறுவை சாகுபடி செய்தார். 1,80,000 ரூபாய்க்கு நிலம் குத்தகைக்கு எடுத்து குறுவை சாகுபடி செய்த நிலையில், 3 ஏக்கர் நெற்பயிர்களும் நீரில் மூழ்கி முழுவதுமாக சேதமடைந்தது. நெற்பயிர்கள் முளைக்க தொடங்கியதால் டிராக்டர் விட்டு அழித்த பெண் கண்ணீர் விட்டு கதறினார். இதுகுறித்து அவர் பேசும்போது, அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.