"பீகார் மக்கள் மாபெரும் வரலாற்று தீர்ப்பை அளித்துள்ளனர்" - பிரதமர் மோடி உரை
பீகார் சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ம் தேதி மற்றும் 11-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளில் கடந்த 6-ம் தேதி முதல் கட்டமாக 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்த நிலையில் இதுவரை இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவானது. இதனை தொடர்ந்து மீதமுள்ள 122 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த11-ம் தேதி 2-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடந்ததில் மொத்தம் 69 சதவீத வாக்குகள் பதிவாகியது.
பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றதை அடுத்து பீகாரில், மீண்டும் பாஜக ஜனதா தளம் கூட்டணி தலைமையிலான ஆட்சி அமையவுள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,
"மக்களின் மனதை திருடியிருக்கிறோம். மாபெரும் வரலாற்று தீர்ப்பை மக்கள் அளித்துள்ளனர். வரலாற்று வெற்றி பெற்றுள்ள இந்த நேரத்தில் ஜே.பி. கர்பூரி தாகூரை வணங்குகிறேன். இனி ஆர்.ஜே.டி அரசு திரும்ப வரப்போதில்லை. பீகார் மக்கள் அனைத்து தேர்தல் சாதனைகளையும் முறியடித்துவிட்டனர். அவர்கள் முஸ்லீம், யாதவர்கள் கூட்டணியால் வெல்ல முயன்றார்கள். நாம் பெண்கள், இளைஞர்கள் வாக்குகளால் அவர்களை வீழ்த்தி உள்ளோம்.
ஜனநாயகத்திற்கு பிழையற்ற வாக்காளர் பட்டியல் அவசியம். எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையில் அனைவரும் பங்கேற்க வேண்டும். தேர்தல் ஆணையம் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. அமைதியான தேர்தலை நடத்திய ஆணையம், அதன் ஊழியர்கள், பாதுகாப்பு படையினருக்கு பாராட்டுகள். நக்சலைட்டு பாதிப்பு அதிகமிருந்த பகுதிகளில் அச்சமின்றி மக்கள் வாக்களிக்க ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. நாட்டு துப்பாக்கி ஆட்சி இனி பீகாரில் வரக்கூடாது என்று மக்கள் வாக்களித்துள்ளனர். மாபெரும் வரலாற்று தீர்ப்பை அளித்துள்ள பீகார் மக்கள் நலனுக்கு என்.டி.ஏ கூட்டணி பாடுபடும்"
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.