எஸ்.ஐ.ஆர் தொடர்பாக விவாதம் நடத்த கோரி எதிர்க்கட்சிகள் அமளி ; இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடரானது நேற்று இரு அவைகளிலும் தொடங்கியது. இந்த கூட்டமானது வருகிற 19-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் 15 அமா்வுகள் இந்த கூட்டத்தொடரில் இடம்பெற உள்ளன.
மத்திய அரசானது இக்கூட்டத் தொடரில் அணுசக்தி மசோதா 2025, காப்பீட்டு திருத்த மசோதா உள்ளிட்ட 13 மசோதாக்களை அறிமுகம் செய்ய உள்ளது.
பாராளுமன்றம் தொடங்குவதற்கு முன்னதாக இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் SIR பணிகளை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் குளிர்காலக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளாக இன்று மாநிலங்களவையில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷமிட்டதைத் தொடர்ந்து மதியம் 2 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
அதேபோல் மக்களவையிலும் காலை முதலே எஸ்.ஐ.ஆர் தொடர்பாக விவாதம் நடத்த கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மதியம் 12 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து 12 மணிக்கு மீண்டும் அவை தொடங்கியதும் எதிர்க்கட்சியினர் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.