எதிர்கட்சிகள் தொடர் அமளி ; மக்களவை நாள் முழுதும் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரானது நேற்று தொடங்கியது. இந்த கூட்டமானது வருகிற 19-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் 15 அமா்வுகள் இந்த கூட்டத்தொடரில் இடம்பெற உள்ளன. கூட்டத் தொடா் தொடங்கிய முதல் நாள் முழவதும் தமிழ் நாடு 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் எஸ்ஐஆா் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கின.
தொடர்ந்து, இரண்டாவது நாளாக இன்றும் மக்களவையில், எஸ்ஐஆா் குறித்து விவாதம் நடத்த கோரி எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். ஆனால், அவைத் தலைவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார்.
இதனையடுத்து எதிா்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதியில் கூடி அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவையானது முதலில் பகல் 12 வரையும் தொடர்ந்து பிற்பகல் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியால் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. இதனிடையே, காங்கிரஸ், திமுக உள்பட அனைத்துக் கட்சிகளின் அவைத் தலைவர்களுக்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.