இனி 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்வோருக்கு குட் நியூஸ்!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.1 கோடியே 70 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். அதன்படி மலைப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.78.20 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள புதிய கட்டடத்திற்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
மேலும் மலைப்பட்டி புதூர் பகுதியில் ரூ.6 லட்சம் மதிப்பில் குளியல் தொட்டி கட்டுவதற்கும், ஆதி திராவிடர் தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டுவதற்கும் அமைச்சர் அடிக்கல் நாட்டினார். மலைப்பட்டி மற்றும் பெரியவள்ளிக்குளம் கிராமத்தில் தலா ரூ.14.50 லட்சம் மற்றும் ரூ 16.75 லட்சம் மதிப்பில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளையும் அமைச்சர் திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து பாலவநத்தம் ஆரம்பப் பள்ளி வளாகத்தில் ரூ.34.23 லட்சம் மதிப்பில் கூடுதல் பள்ளி கட்டடம் கட்டுவதற்கும், கூத்திப்பாறை கிராமத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர் பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பாலவநத்தம் கிராமத்தில் பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் பேசினார். அதில் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் திருமண மண்டபம் கட்டப்பட உள்ளது. பாலவநத்தம் கிராமத்தில் வரும் செப்டம்பர் மாதம் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மகளிர் உரிமைத் தொகை, முதியோர் பென்ஷன் கிடைக்காதவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
அதேபோல 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்கப்படாமல் இருந்தது தற்போது தான் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது தான் மெல்ல மெல்ல பணிகள் துவங்கப்பட்டு வருகிறது. இன்னும் பத்து நாட்களுக்குள் அதிக எண்ணிக்கையில் பணியாட்களுக்கு பணி வழங்கப்படும். நல்லது கெட்டது என அனைத்திலும் உங்களுடன் நான் தான் இருக்கிறேன்.
எனக்கு உங்களை விட்டால் யாரும் இல்லை, உங்களுக்கு என்னை விட்டால் யாரும் இல்லை. என் வீட்டுக்கு வருபவர்கள் யாரையும் சாப்பிடாமல் நான் அனுப்பியது கிடையாது. நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. உங்களுடன் இருப்பேன் எனக்கு உதவியாக நீங்கள் இருக்க வேண்டும். நமக்கு நல்ல முதலமைச்சர் கிடைத்துள்ளார் அவருக்கும் நீங்கள் உதவியாக இருக்க வேண்டும் என பேசினார்.