"வண்ணப் புன்னகை என்றும் தொடர வாழ்த்துகிறேன்.." - குழந்தைகள் தினத்தையொட்டி தவெக தலைவர் விஜய் வாழ்த்து!
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் தினத்தையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் தினத்தையொட்டி தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
"வண்ணத்துப் பூச்சிகளாய்ப் பறப்பவர்கள்! வெள்ளைச் சிரிப்பினில் நம் உள்ளம் நெகிழ வைப்பவர்கள்! மழலைச் சிரிப்பினில், மனக்காயம் ஆற்றுபவர்கள் குழந்தைகள்! விலை மதிப்பில்லாத நம் செல்வங்களின் உரிமைகளை என்றும் காத்திடுவோம், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம். கள்ளம் கபடமற்ற நம் மழலைச் செல்வங்களின் கனவுகள் யாவும் நனவாக, எல்லையில்லாக் கற்பனை வானில் சிறகடித்துப் பறக்க, உங்கள் வண்ணப் புன்னகை என்றும் தொடர வாழ்த்துகிறேன்"
இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.