”மாலியில் கடத்தப்பட்ட 5 தமிழர்களை மீட்க தூதரக நடவடிக்கைகள் தேவை" - மத்திய, மாநில அரசுகளுக்கு பழனிசாமி கோரிக்கை!
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மாலி. இங்கு ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள அல்-கய்தா மற்றும் ஐ.எஸ் ஆதரவு தீவிரவாத அமைப்புகள் அரசுடன் மோதலில் ஈடுபட்டுள்ளன. இதனால் மாலியில் உள்நாட்டு போர் நிகழ்ந்து வருகிறது.
இதனிடையே கடந்த 6 ஆம் தேதி கோப்ரி நகரத்தின் அருகே உள்ள மின் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த தமிழகத்தைச் சேர்ந்த 5 பேரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். இவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த புதியவன் (52), பொன்னுத்துரை (41), பேச்சிமுத்து (41), தென்காசி மாவட்டத்தை சேர்ந்த இசக்கிராஜா (36), சுரேஷ் (26) ஆகியோர் எனத் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கடத்தப்பட்டவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர்ருக்கு, அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் மாலியில் கடத்தப்பட்ட தமிழர்கள் 5 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் உள்ள கோப்ரி நகரத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த இசக்கி ராஜா, சுரேஷ், பொன்னுத்துரை, புதியவன், பேச்சிமுத்து ஆகிய ஐந்து பேரை, உள்நாட்டுப் பிரச்சனை காரணமாக ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் கடத்திச் சென்றதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. பயங்கரவாதிகள் பிடியில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தோரை மீட்க அந்நாட்டு தூதரகம் வாயிலாக முன்னெடுப்புகளை துரிதப்படுத்துமாறு மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்”
என்று தெரிவித்துள்ளார்.