"மதுரையை தொழில் நகரமாக மாற்ற வேண்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மதுரையில் இன்று ‘தமிழ்நாடு வளர்கிறது’ முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் ரூ.36,660.35 கோடி மதிப்பீட்டிலான முதலீடுகளில் 56,766 இளைஞர்களின் புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்கப்படுகிறது. மாநாட்டில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட பலர் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழக அரசு இதுவரை செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 80 சதவீதங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. முதலீடை ஈர்ப்பது எளிதான காரியமல்ல, மாநிலத்தில் கொள்கை, வளர்ச்சி என அனைத்து நிலைகளையும் பார்த்து தான் முதலீடு செய்வார்கள். மதுரையை கோவில் நகரம் எனும் பெயரை வைத்து கொண்டு இருந்தால் போதுமா? மதுரையை தொழில் நகரமாக மாற்ற வேண்டும். வணிகர்களின் தொழில் தேர்வுக்கு தமிழகம் தான் முதன்மை என அவர்களின் மனதில் உள்ளது. இந்த நம்பிக்கைக்கு நன்றி சொல்லி கொள்கிறேன்.
தூங்காநகரம் என்பதை விட விழிப்புடன் உள்ள நகரம் மதுரை என்று சொல்ல வேண்டும். இந்தியாவின் வரலாற்றை தமிழகத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும். 34 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பை நாங்கள் உருவாக்கி உள்ளோம். புதிய ஒப்பந்தம் போடுவதை மட்டுமே வேலையாக வைத்திருப்பவன் இல்லை நான். எல்லா துறைகளையும் ஆய்வு செய்பவன் நான்.
தொழில் ஒப்பந்தகளை நடைமுறைப்படுத்த செய்வதில் கண்ணும் கருத்துமாக நானும் தொழில்துறை அமைச்சரும் உள்ளோம். ஐக்கிய அமீரகம், அமெரிக்கா, லண்டன் சென்று தொழில் முதலீடுகளை ஈர்த்து தமிழகம் தான் முதலீட்டாளர்களின் முதல் முகவரி என்பதை உறுதி செய்தோம். தூத்துக்குடி, கோவையில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி இப்போது மதுரையில் மாநாடு நடக்கிறது.
மாநிலம் முழுவதும் சீரான மாவட்டம் தோறும் பரவலான வளர்ச்சி என்பதை நிறைவேற்றி உள்ளோம். தமிழ்நாடு தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாறி தமிழகம் தலை நிமிரும் காலம் வந்துள்ளது. சர்வதேச விமான நிலையம், மற்ற மாநிலங்களை இணைக்கும் சாலைகள் என சிறப்பான உட்கட்டமைப்பு வலிமையான கட்டமைப்பு உள்ள நகரம் மதுரை. எதிர்காலத்தில் மிகப்பெரிய தொழில் வழித்தட மையமாக மாற மதுரை தயாராக உள்ளது.
தமிழக அரசு மத்திய அரசோடு இணைந்து 1892 கோடி ரூபாய் மதிப்பீல் பிஎம்மித்ரா ஜவுளி பூங்காவை அமைத்து வருகிறோம். இந்த முன்னெடுப்பு மாநிலத்தின் ஜவுளி உற்பத்தியை மேம்படுத்தும். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி செயல்பட்டு வருகிறோம். இணைந்து செயலாற்றுவோம். இணையற்ற வளர்ச்சி பெறுவோம் என்று தெரிவித்துள்ளார்.