மதுரை : சுடு தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த 7 மாத குழந்தை உயிரிழப்பு!
மதுரை மாநகர் மாடக்குளம் மெயின் ரோடு பகுதியில் உள்ள கந்தன் சேர்வை தெருவை சேர்ந்தவர்கள் சேதுபதி, விஜயலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு 7 மாதத்திற்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. சேதுபதி பரமக்குடியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அக்டோபர் 27 ஆம் தேதி விஜயலெட்சுமி தனது 7 மாத பெண் குழந்தையை வீட்டிலுள்ள கட்டிலில் துாங்க வைத்துள்ளார்.
அப்போது கட்டிலின் அருகிலயே குளிப்பதற்காக அருகில் உள்ள மின்சார இணைப்பின் உதவியுடன் வாட்டர் ஹீட்டர் மூலம் தண்ணீரை சுட வைத்துவிட்டு விஜயலட்சுமி சமையல் அறையில் இருந்துள்ளார். அப்போது கட்டிலில் தூங்கி கொண்டிருந்த குழந்தை திரும்பிய போது கட்டிலில் இருந்து தவறி சுடுநீர் வாளிக்குள் விழுந்ததுள்ளது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த விஜயலட்சமி குழந்தையை மீட்டுள்ளார்.
ஆனால் குழந்தைக்கு தலை முதல் மார்பு வரை கடுமையான காயம் ஏற்பட்டிருந்த நிலையில் குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் சிகிச்சையில் இருந்த 7 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இது குறித்து எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.