"குழந்தைகளின் சொர்க்கமாக தமிழகத்தை மாற்ற உறுதியேற்போம்" - அன்புமணி ராமதாஸ்!
ஜவஹர்லால் நேரு பிறந்தநாளான இன்று ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசியல்கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "ரோஜாவின் ராஜா என்றும், நேரு மாமா என்றும் குழந்தைகளால் போற்றப்பட்ட இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளான இன்று குழந்தைகள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் இருக்கும் உலகம் மகிழ்ச்சியானது; குழந்தைகளின் உலகம் உன்னதமானது.
ஆனால், நல்வாய்ப்புக் கேடாக தமிழ்நாடு தான் குழந்தைகளில் நரகமாக மாறிவிட்டது. குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத உலகமாக தமிழகம் மாறிவிட்டது. திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 60.66 விழுக்காடும், போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 52.30 விழுக்காடும் அதிகரித்துள்ளன. மொத்தத்தில், திமுக ஆட்சியில், தமிழ்நாடு குழந்தைகள் வாழத் தகுதியற்ற மாநிலமாக மாறி வருகிறது. இந்த நிலையை மாற்றி தமிழ்நாட்டை குழந்தைகளின் சொர்க்கமாக மாற்றுவதற்காக உழைக்க இந்த நாளில் உறுதியேற்போம்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.