அரசியலில் இணைகிறாரா நடிகர் சஞ்சய் தத்?
நடிகர் சஞ்சய் தத் அரசியலில் ஈடுபடப்போவதாக பேசப்பட்ட நிலையில், அவர் அதற்கு விளக்கமளித்துள்ளார்.
நடிகர் சஞ்சய் தத் பாலிவுட்டில் மிகப்பெரிய நடிகராக இருக்கிறார். பாலிவுட் சினிமா உலகில் கலக்கினாலும், தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு சஞ்சய் தத் பரீட்சையமானது கேஜிஎப் எனும் படத்தின் மூலம்தான். இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் மிரட்டியிருந்தார். அதைத்தொடர்ந்து லியோ படத்தில் விஜய்யின் அப்பா கேரக்டரில் ஆண்டனி தாசாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் சஞ்சய் தத் விரைவில் அரசியலில் ஈடுபடப்போவதாக பேசப்பட்டது. அதற்கு சஞ்சய் தத் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "நான் அரசியலுக்கு வருவேன் என்ற வதந்திகளுக்கு ஓய்வு கொடுக்க விரும்புகிறேன். நான் எந்த கட்சியிலும் சேரவில்லை, தேர்தலில் போட்டியிடவில்லை. அரசியல் களத்தில் இறங்க முடிவு செய்தால், அதை முதலில் அறிவிப்பேன். தற்போது என்னைப் பற்றி பரப்பப்படும் செய்திகளை நம்புவதைத் தவிர்க்கவும்" என்று தெரிவித்தனர்.
சஞ்சய் தத் தேர்தலில் போட்டியிடுகிறார் என்ற வதந்தி பரவுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் சார்பில் மும்பை வடமேற்கு தொகுதியில் சஞ்சய் தத் சகோதரி பிரியா தத் போட்டியிட்டார். அப்போது அவருக்கு சஞ்சய் தத் ஆதரவு தெரிவித்தார். அப்போது சஞ்சய் தத் காங்கிரஸ் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடலாம் என்ற தகவல் வெளியானது. அதற்கு சஞ்சய் தத் மறுப்பு தெரிவித்திருந்தார்