”இந்திய கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” - தேஜஸ்வி யாதவ் உறுதி..!
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே பீகாரில் நவம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன் படி, கடந்த 6 ஆம் தேதி முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக நேற்று 122 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவுகள் நடைபெற்றன.
இந்த நிலையில் நேற்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவுற்ற நிலையில் பீகாரில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணியே அதிக தொகுதிகளை வெல்லும் என்று தெரிவித்தன.
இந்த நிலையில் இன்று மகாத்பந்தன் (இந்தியா) கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
"நேற்று, மாலை வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கும்போதே, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளிவரத் தொடங்கின. இந்த கருத்து கணிப்புகள் பாஜகவின் வழிகாட்டுதலின் பேரில் வெளியிடப்பட்டுள்ளன. இவை வெறும் உளவியல் அழுத்தங்கள் மட்டுமே, அதிகாரிகளின் அழுத்தத்தால் நடத்தப்படுபவை.
தேர்தல் முடிந்ததும், நாங்கள் மக்களிடமிருந்து கருத்துக்களைச் சேகரித்தோம், அவை எங்களுக்கு சாதகமானதாக இருந்தன. கடந்த காலங்களில், இதுபோன்ற நேர்மறையான கருத்துக்கள் வந்ததில்லை. இவை 1995 தேர்தல்களின் போது கிடைத்ததை விட சிறந்தவை. இந்திய கூட்டணி அமோக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். பீகார் சட்டமன்றத் தேர்தலில் இந்த முறை அதிகமான வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்துள்ளனர். இது மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதைக் குறிக்கிறது. மக்கள் 'மகாத்பந்தன்' (இந்தியா) கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
பாஜக தலைவர்கள் வாக்கு எண்ணிக்கை செயல்முறையை தாமதப்படுத்த நிச்சயமாக முயற்சிப்பார்கள். இதை நாங்கள் எந்த நிலையிலும் நடக்க அனுமதிக்க மாட்டோம். அவர்களின் செயல்பாடுகளை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்” என்றார்.
இரு கட்டங்களாக பதிவான வாக்குகள் நவம்பர் 14ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.