"தவெகாவில் எனக்கு எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை" - செங்கோட்டையன் பேட்டி!
ஈரோடு மாவட்டத்தில் வரும் 16ஆம் தேதி தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்கான அனுமதி கோரி செங்கோட்டையன் ஈரோடு ஆட்சியர் மற்றும் எஸ்பியிடம் மனு அளித்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன், "தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நம்முடைய ஈரோடு மாவட்டத்தில் வருகின்ற 16ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்கான அனுமதி கோரி ஈரோடு ஆட்சியரிடம், எஸ்.பி.யிடமும் கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
அதற்குரிய அனுமதியை பெற்றவுடன் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும். அரசு என்ன நடவடிக்கை மேற்கொள்கிறார்களோ அதை நிறைவு செய்து வெற்றிகரமாக இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிர்காலத் தமிழகத்தை உருவாக்குவதற்கு மக்கள் சக்தி அவரை அங்கே அமர்த்தும். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தவெகாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும். முன்னாள் அமைச்சர்கள் வர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.
ஒவ்வொரு இயக்கங்களும் தங்களது கொள்கை அடிப்படையில் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். அவரவர்களும் ஒரு நல்ல இயக்கத்தோடு அதுவும் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் நல்ல மனதோடு தமிழக வெற்றி கழகத்தினுடைய தலைவர் வரும் பொழுது தமிழகத்தில் ஒரு மாற்றம் ஏற்படும் என்ற எண்ணங்கள் எல்லோரிடத்திலும் உள்ளது. அந்த அடிப்படையில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நான் தவெகாவில் இணையும்போது நிபந்தனைகள் விதித்ததாக கூறுவது தவறான தகவல். எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்று தெரிவித்துள்ளார்.