கோவா தீ விபத்து - 23 பேர் உயிரிழப்பு!
கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள பாகா பகுதி கடற்கரையில் இயங்கி வந்த இரவு விடுதியில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விடுதி ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் உள்பட 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் உயிரிழந்தவர்களின் பெரும்பாலானவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மேலும் சிலிண்டர் வெடித்ததில் 10-க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்து சேதமாயின. இதனிடையே அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் மற்றும் எம்.எல்.ஏ., மைக்கேல் லோபோ சம்பவம் இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பிரமோத் சாவந்த், "விடுதியின் சமையலறையில் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மொத்தம் 23 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் 3 அல்லது 4 பேர் மட்டுமே சுற்றுலாப் பயணிகள். மற்ற அனைவரும் சமையலறையில் பணியிலிருந்த விடுதி ஊழியர்கள். பாதுகாப்பு குறைபாட்டுடன் இயங்கிய விடுதியின் உரிமையாளர்கள் மற்றும் அனுமதித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.